Published : 17 Sep 2017 11:00 AM
Last Updated : 17 Sep 2017 11:00 AM
மியான்மரில் இருந்து அகதிகளாக வந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்குவதற்கு, 14,000 கூடாரங்களை கட்டுவதற்கு வங்கதேச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மியான்மரில் சிறுபான்மை இனத்தவர்களான ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் பெரும்பான்மை புத்த மதத்தினருக்கும் இடையில் கடந்த மாதம் 25-ம் தேதி மோதல் வெடித்தது. இதில் பலர் கொல்லப்பட்டனர். இதனால் ரோஹிங்கியா முஸ்லிம்கள், இந்தியா, வங்கதேசம் உட்பட அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.வங்கதேசம் மிக அருகில் உள்ளதால் லட்சக்கணக்கானோர் அங்கு அகதிகளாக வந்துள்ளனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முடியாமல் வங்கதேச அரசு திணறி வருகிறது. ஐ.நா. புள்ளிவிவரப்படி இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வங்கதேசத்துக்குள் அகதிகளாக வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
அவர்கள் சாலையோரங்களிலும், வயல்வெளிகளிலும் மலைப் பகுதிகளிலும் தங்கி உள்ளனர். தற்போதுள்ள அகதிகள் முகாம்களில் போதிய இடவசதி இல்லை. இங்கு தங்கியிருந்த ஒரு சிறுவன் வயிற்றுப் போக்கால் உயிரிழந்தான். இதனால் தொற்றுநோய் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
“மியான்மரில் இருந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வந்தவண்ணம் உள்ளனர். அவர்களை ஒழுங்குபடுத்தி, நிவாரணப் பொருட்களை சரியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உள்ளூர் மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில், ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்குவதற்கு 14,000 கூடாரங்கள் அமைக்கவும், அவற்றை 10 நாட்களில் கட்டி முடிக்கவும் வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வங்கதேச அதிகாரிகள் கூறும்போது, ‘‘காக்ஸ் பஜார் மாவட்டம் குடுபலாங் என்ற பகுதியில் ரோஹிங்கியா முஸ்லிம்களின் அகதிகள் முகாம் உள்ளது. அதன் அருகிலேயே 2,000 ஏக்கரில் 14,000 கூடாரங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு கூடாரத்திலும் 6 குடும்பங்கள் தங்க வைக்கப்படும். இந்த கூடாரங்களில் கழிப்பறை, கழிவுநீர் வெளியேறும் வசதி, தண்ணீர் வசதி, மருத்துவ வசதிகள் செய்து தரப்படும்’’ என்றார்.
இந்தப் பணிகள் அனைத்தும் ஐ.நா.வின் பல்வேறு துறைகள் உதவியுடன் செய்து முடிக்கப்பட உள்ளன. தவிர இந்தியாவும் 7,000 டன் நிவாரணப் பொருட்களை அளிக்க முன்வந்துள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT