Published : 21 Apr 2023 03:54 PM
Last Updated : 21 Apr 2023 03:54 PM

அதிகார துஷ்பிரயோக புகார்: பிரிட்டன் துணைப் பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா

டொமினிக் ராப்

லண்டன்: பிரிட்டன் துணை பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா செய்தார். நீதித்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களிலும் தலையிட்டதாக துணைப் பிரதமர் மீது அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் டோலி, பிரதமரிடம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த நிலையில், ராப் ராஜினாமா செய்துள்ளார்.

டொமினிக் ராப் ராஜினாமா குறித்து பிரதமர் ரிஷி சுனக் கூறுகையில், "நான் இன்னமும் டொமினிக் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். ஆனால் அறிக்கை குறித்து நான் கவனமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது" என்றார். இருப்பினும் அந்த அறிக்கை எப்போது பொதுவெளியில் வெளியிடப்படும் என்று அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

புகார் என்ன? - கன்சர்வேட்டிவ் கட்சியின் மூத்த உறுப்பினர் டொமினிக் ராப் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் துணைப் பிரதமராக இருந்தவர். இந்த நிலையில், இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றதைத் தொடர்ந்து மீண்டும் துணைப் பிரதமராக டொமினிக் ராப் நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் மீது குடிமைப் பணியியல் அதிகாரிகள் சிலர் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தனர், டொமினிக் ராப் தங்கள் மீது அதிகார துஷ்பிரயோகப் பயன்படுத்துவதாகவும், இதனால் சில நேரங்களில் அவருடனான ஆலோசனைக் கூட்டங்களுக்கு முன்னர் தங்களுக்கு உடல் ரீதியான உபாதைகள் ஏற்பட்டுவிடுவதாகவும் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக புகார் தெரிவித்தவர்களில் பலர் பல ஆண்டுகளாக அனுபவமுள்ள மூத்த அதிகாரிகள்.

இந்நிலையில் இந்தப் புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள ஒரு சுதந்திரமான குழு அமைக்கப்பட்டது. பிரதமர் ரிஷி சுனக், மூத்த வழக்கறிஞர் ஆல்மண்ட் டோலியை விசாரணைக்காக நியமித்தார். இருப்பினும் துணைப் பிரதமரின் போக்கு நாடாளுமன்றத்திலும் கூட விவாதப் பொருளானது. தொடர் சர்ச்சைகள் காரணமாக பிரதமர் ரிஷி சுனக் ஒருமுறை அளித்தப் பேட்டியில், சுதந்திரமான குழு தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்போது எனது அரசு துரிதமான நடவடிக்கையை எடுக்கத் தயங்கமாட்டேன் என்று கூறினார். அதேபோல் ராப்பும் விசாரணைக் குழுவின் முடிவுகளை மதிப்பேன் என்று கூறியிருந்தார். என் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால் நான் ராஜினாமா செய்வேன் என்றும் கூயிருந்தார்.

இந்நிலையில், பிரிட்டன் துணை பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா செய்துள்ளார். ஆனால், ராப் தன்மீதான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துவந்தார். தான் நீதித்துறை செயலாளராக இருந்தபோதும், வெளியுறவுச் செயலாளர் மற்றும் ப்ரெக்ஸிட் செயலாளராக இருந்தபோதும் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்றும் கூறியிருக்கிறார்.

பிரிட்டனில் ரிஷி சுனக் தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர் அவரது அமைச்சரவையிலிருந்து வெளியேறும் மூன்றாவது முக்கியப் புள்ளி டொமினிக் ராப் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x