Published : 21 Apr 2023 12:00 PM
Last Updated : 21 Apr 2023 12:00 PM
மாஸ்கோ: உக்ரைன் போரில் ரஷ்யாவின் போர் விமானம் தவறுதலாக தங்களது நகரிலேயே குண்டு வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் போர் விமானம் Su-34 , உக்ரைனின் எல்லைப்புறத்தில் உள்ள பெல்கோரோட் நகரில் தவறுதலாக குண்டு வீசியது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சம் அடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து பிராந்திய ஆளுநர் கிளாகோவ் கூறும்போது, ”ரஷ்யா வீசிய குண்டால் நகரத்தின் மையப் பகுதியில் பெரிய பள்ளம் உருவாகி உள்ளது. மேலும் இந்த குண்டுவெடிப்பில் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர். பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன “ என்று தெரிவித்துள்ளார்.
இந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடந்தி வருவதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் எல்லையோரத்தில் பெல்கோரோட் நகரத்தில் 3,70,000 மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நகரம் உக்ரைனின் எல்லையில் இருந்து 25 மைல் (40 கிமீ) தொலைவில் உள்ளது. கடந்த ஆண்டு உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு உக்ரைன் ராணுவத்தால் தங்களுக்கு ஆபத்து ஏற்படுமா என அந்நகர மக்கள் பயந்து வாழ்கின்றனர். உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்ய போர் விமானங்கள் இந்த நகரத்தைக் கடந்துதான் செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா - உக்ரைன் போர்: நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்தது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ அமைப்பும், அமெரிக்காவும் ஆயுதங்கள் வழங்கிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...