Published : 18 Apr 2023 05:24 PM
Last Updated : 18 Apr 2023 05:24 PM
கார்த்தும்: சூடானில் 24 மணி நேரம் மோதலை நிறுத்த துணை ராணுவப் படை அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதனை அந்நாட்டு ராணுவம் மறுத்துள்ளது.
சூடான் நாட்டில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற துணை ராணுவப் படைகளில் ஒன்றான பலம் பொருந்திய ஆர்எஸ்எஃப் படைகளும் ஆட்சியைக் கையில் வைத்திருக்கும் ராணுவமும் மோதலில் ஈடுபட்டுள்ளன. இந்த மோதல் இன்று (ஏப்.18) ஐந்தாம் நாளை எட்டியுள்ள நிலையில் அமெரிக்கா தலையீட்டின் காரணமாக போராடும் ஆர்எஸ்எஃப் படைகள் 24 மணி நேரம் மோதலை நிறுத்த அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆர்எஸ்எஃப் குழுவின் தலைவர் ஜெனரல் டகலோ, "பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும் வகையிலும் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவம் செய்ய ஏதுவாகவும் 24 மணி நேரம் அமைதியைக் கடைப்பிடிக்க நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். ஆனால், இந்த மோதல் நிறுத்தத்திற்கு சூடான் ராணுவம் இசைவு தெரிவிக்குமா என்பது தெரியவில்லை. சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை மீறி ராணுவம் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் கூட குண்டுகள் வீசி தாக்குதல் நடத்திவருகின்றனர். நாங்கள் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளின்கனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" என்றார்.
Following a conversation with U.S. Secretary of State @SecBlinken and outreach by other friendly nations similarly calling for a temporary ceasefire, The RSF reaffirms its approval of a 24 HR armistice to ensure the safe passage of civilians and the evacuation of the wounded. 1/4
— Mohamed Hamdan Daglo (@GeneralDagllo) April 18, 2023
ஆனால், சூடான் ராணுவம் இப்படி ஒரு அமைதி ஒப்பந்தம் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது. சர்வதேச சமூகம் இதில் மத்தியஸ்தம் செய்வதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
செஞ்சிலுவை சங்கம் கோரிக்கை: இதற்கிடையில், கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் எவ்வித மீட்பு, நிவாரணப் பணிகளும் செய்ய முடியவில்லை என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ரெட் கிரெஸென்ட் அமைப்புகள் தெரிவித்துள்ளன. கார்த்தும் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை நெருங்கக் கூட முடியவில்லை என்று செஞ்சிலுவை சங்கத்தின் குழுத் தலைவர் ஃபரீத் அய்வார் தெரிவித்துள்ளார்.
நகருக்குள் இருந்து தங்களுக்கு தொடர்ச்சியாக உதவி கோரி அழைப்புகள் வந்தும் கூட தங்களால் எதுவும் செய்ய இயலாத நிலையிலேயே இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஒருவேளை 24 மணி நேரம் மோதல் நிறுத்தம் அமலானால்கூட தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயன்றவரை உதவிகளை செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
சூடானில் இதுவரை 185 பேர் உயிரிழந்துள்ளனர். 1800 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள் என்பது வேதனையான உண்மை.
ஐரோப்பிய யூனியன் தூதர் மீது தாக்குதல்: முன்னதாக, நேற்று கார்த்தும் நகரில் சூடானுக்கான ஐரோப்பிய யூனியன் தூதர் அய்தான் ஓ ஹரா தாக்கப்பட்டார். வீட்டிலிருந்த அவரை ஆயுதம் ஏந்திய நபர்கள் மிரட்டி கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். அவரிடமிருந்து பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
அதேபோல் அமெரிக்க தூதரக வாகனத்தின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனை வெளியுறவு அமைச்சர் ஆண்டனி ப்ளின்கன் உறுதி செய்துள்ளார். மேலும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததோடு மோதலில் ஈடுபட்டுள்ள சூடான் ராணுவத் தளபதியையும் அந்நாட்டு துணை ராணுவப் படைத் தளபதியையும் தொடர்பு கொண்டு எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்தே பொதுமக்கள் குறிப்பாக வெளிநாட்டு தூதர்கள், பணியாளர்கள் வெளியேற ஏதுவாக அமைதி ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்வதாகத் தெரிகிறது.
சூடானில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர், கிளிர்ச்சி என்பது தொடர்கதையாகிவிட்டது. வறுமையும் பசியும் தண்ணீர்ப் பஞ்சமும் வாட்டும் சூடானில் தங்கச் சுரங்கங்கள் ஏராளமாக உள்ளன. கூடவே எண்ணெய் வளமும் தாராளமாக இருக்கிறது. சூடான் நாட்டின் முக்கிய வருமானமாக எண்ணெய் ஏற்றுமதி இருக்கின்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT