Published : 18 Apr 2023 09:15 AM
Last Updated : 18 Apr 2023 09:15 AM
கார்த்தும்: சூடான் நாட்டில் ராணுவத்திற்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே நடக்கும் மோதல் காரணமாக அங்கே இதுவரை 185 பேர் உயிரிழந்துள்ளனர். 1800 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், கலவரக்காரர்கள் மருத்துவமனைகள் சூறையாடியதால் மருந்து தட்டுப்பாடும் நிலவுகிறது. ஏற்கெனவே அங்கே உணவுத் தட்டுப்பாடு நிலவும் சூழலில் இந்தக் கலவரம் காரணமாக நிலவரம் இன்னும் மோசமடைந்துள்ளது.
அதிகாரத்துக்கான மோதல்: சூடான் ராணுவத் தளபதி அப்தல் ஃபத்தா அல் புர்ஹானுக்கும் துணை ராணுவப் படை தளபதி முகமது ஹம்தான் டக்ளோவுக்கும் இடையே நடக்கும் மோதல் தான் இந்தக் கலவரத்திற்கு காரணம்.. அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்ற இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்திருந்தாலும் கூட இந்த மோதல் இன்னும் அதிக நாட்களுக்கு நீடிக்கலாம் என்று கலவர ஆய்வு நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சூடானில் முஸ்லிம்களே பிரதானமாக வாழ்கின்றனர். இது ரம்ஜான் புனித மாதம் என்பதால் முஸ்லிம் மக்கள் நோன்பு மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்தக் கலவரத்தின் காரணமாக பண்டிகையும் பறிபோனது இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சோகத்தில் உள்ளனர். உயிர் பிழைத்திருப்போமா என்ற அச்சத்தில் உள்ளனர்.
இதற்கிடையில் சூடானுக்கான ஐ.நா தூதர் வோல்கர் பெர்தஸ் பாதுகாப்பு கவுன்சிலிடம், "சூடான் கலவரத்தில் இதுவரை 185 பேர் உயிரிழந்துள்ளனர். 1800 பேர் காயமடைந்துள்ளனர். இப்போது நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. அதிகார மாற்றம் ஏற்படுமா என்பதை கணிப்பது கடினமாக உள்ளது " என்று தெரிவித்துள்ளார். முன்னதாக ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்ரேஸ் சூடானில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இரு தரப்பினரும் அமைதிப் பாதைக்கு திரும்புமாறு கோரினார். அதனைவிடுத்து மோதல் போக்கை ஊக்குவித்தால் அது நாட்டுக்கும் அந்தப் பிராந்தியத்திற்கும் மிக மோசமாக விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஐரோப்பிய யூனியன் தூதர் மீது தாக்குதல்: முன்னதாக நேற்று கார்த்தும் நகரில் சூடானுக்கான ஐரோப்பிய யூனியன் தூதர் அய்தான் ஓ ஹரா தாக்கப்பட்டார். வீட்டிலிருந்த அவரை ஆயுதம் ஏந்திய நபர்கள் மிரட்டி கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். அவரிடமிருந்து பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
அதேபோல் அமெரிக்க தூதரக வாகனத்தின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனை வெளியுறவு அமைச்சர் ஆண்டனி ப்ளின்கன் உறுதி செய்துள்ளார். மேலும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததோடு மோதலில் ஈடுபட்டுள்ள சூடான் ராணுவத் தளபதியையும் அந்நாட்டு துணை ராணுவப் படைத் தளபதியையும் தொடர்பு கொண்டு எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT