Published : 18 Apr 2023 06:54 AM
Last Updated : 18 Apr 2023 06:54 AM

சீனாவுக்கு சவால் விடுக்கும் வகையில் தைவான் கடல் பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் ரோந்து

அமெரிக்காவின் யுஎஸ்எஸ் மிலியஸ் போர்க்கப்பல்

தைபே: தைவான் கடல் பகுதியில் சீன கடற்படை அண்மையில் போர் ஒத்திகையை நடத்தியது. இதைத் தொடர்ந்து சீனாவுக்கு சவால் விடுக்கும் வகையில் தைவான் கடல் பகுதியில் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் மிலியஸ் போர்க்கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டது.

சீனாவில் கடந்த 1911-ல் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, சீன தேசிய கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. கடந்த 1927-ம் ஆண்டில் ஆளும் கட்சிக்கு எதிராக, சீன கம்யூனிஸ்ட் கட்சி போர்க்கொடி உயர்த்தியது. இதன் காரணமாக 1949-ம் ஆண்டு வரை சீனாவில் உள்நாட்டுப் போர் நீடித்தது. இந்த போரில் தோல்வியை தழுவிய சீன தேசிய கட்சியினர், தென் சீன கடலில் 168 தீவுகள் அடங்கிய தைவானில் குடியேறினர். அந்த பகுதியை சீனா தற்போது சொந்தம் கொண்டாடி வருகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் அப்போதைய சபாநாயகர் நான்சி பெலோசி தைவானில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். அப்போது முதல் சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. தைவானை சுற்றி வளைக்கும் வகையில் சீன போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. சீன போர் விமானங்கள் அடிக்கடி தைவான் வான் பரப்பில் அத்துமீறி நுழைந்து வருகின்றன.

இந்த சூழலில் தைவானை ஒட்டிய கடல் பகுதியில் ஏப்ரல் 8, 9, 10 ஆகிய தேதிகளில் சீன ராணுவம் பிரம்மாண்ட போர் ஒத்திகையை நடத்தியது.

சீன ராணுவம், கடற்படை, விமானப்படை இணைந்து நடத்திய போர் பயிற்சியில் 54 போர் விமானங்கள், 8 போர்க்கப்பல்கள், ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர். கடைசி நாள்போர் ஒத்திகையின்போது தைவானின் தென்மேற்கு, தென்கிழக்குவான்பரப்பில் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தன.

சீனாவின் போர் ஒத்திகைக்கு பதிலடியாக பிலிப்பைன்ஸின் பாலிகதான் பகுதியில் அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் வீரர்கள் இணைந்து கடந்த 11-ம் தேதி போர் ஒத்திகையை தொடங்கினர். இதில் 18,000 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 3 வாரங்கள் தொடர்ந்து போர் ஒத்திகை நடத்தப்படுகிறது.

மேலும் சீனாவுக்கு சவால் விடுக்கும் வகையில் அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் மிலியஸ் போர்க்கப்பல் நேற்று முன்தினம் தைவான் நீரிணை பகுதியில் நுழைந்தது. இதுதொடர்பாக அமெரிக்க கடற்படை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “சர்வதேச சட்ட விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமான கடல் போக்குவரத்தை உறுதி செய்ய தைவான் நீரிணை பகுதியில் யுஎஸ்எஸ் மிலியஸ் வழக்கமான ரோந்து பணியை மேற்கொண்டிருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சீன ராணுவ செய்தித்தொடர்பாளர் கர்னல் சீயிகூறும்போது, “சீனாவின் இறையாண்மை, பாதுகாப்பை உறுதிசெய்ய அதிகபட்ச விழிப்புணர்வுடன் இருக்கிறோம். அமெரிக்க போர்க்கப்பலின் நடமாட்டத்தை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். தைவான் பகுதியில் பதற்றத்தை அதிகரிக்க செய்யும் வகையில் அமெரிக்கா செயல்படுகிறது’’ என்று குற்றம் சாட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x