Published : 17 Apr 2023 06:46 AM
Last Updated : 17 Apr 2023 06:46 AM
மும்பை: நிலவுக்கு விண்கலன்களை அனுப்பி ஆராய்ச்சி செய்யும் பணிகளில் அரசு விண்வெளி நிறுவனங்கள் கவனம் செலுத்தி வந்த நிலையில், தற்போது தனியார் நிறுவனங்களும் நிலவு சார்ந்த ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளன.
முதல் முயற்சியாக 2019-ம் ஆண்டு இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஸ்பேஸ் ஐஎல் நிறுவனம் அதன் ‘பெரெஷீட்’ என்ற லேண்டரை நிலவுக்கு ஏவியது. அந்த லேண்டர் ஏப்ரல் 19-ம் தேதி நிலவில் தரையிறங்கும் முயற்சியின்போது தொடர்பு இழந்தது. இதனால் அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் இரண்டாவது முயற்சியாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எலான் மஸ்குக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘பல்கான் 9’ ராக்கெட் மூலம் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஐ ஸ்பேஸ் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் ‘ஹகுடா ஆர்’ லேண்டரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘ரஷித்’ ரோவரும் நிலவுக்கு ஏவப்பட்டன. இந்நிலையில் இவை வரும் ஏப்ரல் 25-ம் தேதி நிலவின் நிலப் பரப்பில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஹகுடா ஆர்’ லேண்டர் நிலவில் தரையிறங்கியதும் அதனுடன் பொருத்தப்பட்டிருக்கும் ‘ரஷித்’ ரோவர் தனியே பிரிந்து நிலவின் நிலப்பரப்பில் நகர்ந்து செல்லும்.
நுண் கேமராக்கள்...: ஐக்கிய அரபு அமீரகத்தின் முகம்மது பின் ரஷித் விண்வெளி மையத்தின் சார்பில் ‘ரஷித்' ரோவர் நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 10 கிலோ எடையுள்ள இந்த ரோவருடன் நிலவின் நிலப்பரப்பை துல்லியமாக படம்பிடிப்பதற்கான நுண் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் நிலவு ஆராய்ச்சிப் பயணம் இதுவாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT