Published : 15 Apr 2023 05:29 PM
Last Updated : 15 Apr 2023 05:29 PM

அதிகாரத்துக்கான யுத்தம்: தூப்பாக்கிச் சத்தங்களால் மக்கள் பீதி - சூடான் நாட்டில் நடப்பது என்ன?

கார்த்தும்: அதிகார வேட்கைதான் எல்லா யுத்தங்களின் அடிப்படையாக இருந்திருக்கிறது. இன்றளவும் அப்படித்தான். கிழக்கு ஆப்பிரிக்காவின் ஒரு குட்டி நாடான சூடானில் அதிகாரத்தைக் கைப்பற்றுவது யார் என்பதற்காக ஒரு நீண்ட யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அது அவ்வப்போது கலவரமாக வெடிப்பதும் பின்னர் கனன்று கொண்டிருப்பதாகவும் இருக்கிறது. சூடான் யுத்தம் இரு நாடுகளுக்கு இடையே அல்ல சொந்த மக்களுக்குள் நடக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடக்கிறது. ராணுவத்துக்கும், அதன் கிளையான துணை ராணுவத்திற்கும் இடையே நடக்கிறது. இத்தனையும் ஆட்சி அதிகாரத்திற்காக நடக்கிறது. தற்போது கலவர பூமியாக மாறியிருக்கிறது சூடான்.

விமான நிலையம், அதிபர் மாளிகை... - தற்போது சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக அதிருப்தி தெரிவித்து வந்த துணை ராணுவப் படையினர் அந்நாட்டின் தலைநகர் கர்த்தூமில் உள்ள விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால், அங்கு ராணுவத்துக்கும் துணை ராணுவப் படையினருக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. அது மட்டுமல்லாமல், அதிபர் மாளிகையையும் துணை ராணுவப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு திரும்பும் பக்கமெல்லாம் துப்பாக்கிச் சத்தம் தான் கேட்கிறது. கலவரத்தால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இருப்பினும், ‘நாங்கள் நாட்டைப் பாதுகாப்போம்’ என்று ராணுவம் கூறியுள்ளது. அதுதான் மக்களின் அச்சத்திற்கு மேலும் ஒரு காரணமும் கூட. அதிகாரத்திற்கான மோதலில் பலியாகப் போவதென்னவோ அப்பாவி பொதுமக்கள் தானே.

சூடான் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் செயல்படுகின்றன. அதுமட்டுமல்லாது ராணுவத்தின் ஒரு பிரிவான பலம் பொருந்திய துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃப் (Rapid Support Forces) என்ற பிரிவும் ராணுவ ஆட்சிக்கு எதிராக இயங்கிவந்தது.

இந்நிலையில், சூடான் நாட்டின் கர்த்தூம் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக துணை ராணுவப் படை தெரிவித்துள்ளது. இதனையடுத்து சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நிலவி வருகிறது. நாடு முழுவதும் கலவரம் பரவத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் ராணுவம் நாட்டைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.

இந்தியர்களுக்கு எச்சரிக்கை: இதற்கிடையே, சூடானில் உள்ள இந்திய துணை தூதரகம் அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, சூடானில் துப்பாக்கிச் சூடும், கலவரமும் நடப்பதால் அங்கிருக்கும் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வீட்டை விட்டு யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று உடனடியாக அறிவுறுத்தப்படுகிறார்கள். அமைதியாக இருங்கள். அடுத்த தகவலுக்கு காத்திருங்கள் என்று தெரிவித்துள்ளது.

சூடானில் ஏன் இத்தனை மோதல்? - 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் சூடான் பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. 1956-ல் சூடான் விடுதலை பெற்றது. அந்தச் சுதந்திரதுக்கு முன்னதாகவே தெற்கு சூடான், வடக்கு சூடான் என்ற சர்ச்சை நிலவிவந்தது. 1958, 1969 ஆகிய ஆண்டுகளில் அங்கே பெருமளவில் உள்நாட்டுக் கிளர்ச்சி நடந்தது. 1972-ல் அடிஸ் அபாபா ஒப்பந்தத்தின்படி தெற்கு சூடான் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.

பின்னர் 1983-ல் மீண்டும் உள்நாட்டுப் போர் வெடித்தது. காரணம், ஆட்சியைக் கைப்பற்றியிருந்த ராணுவம் முஸ்லிம் ஷாரியா சட்டத்தை திணிக்க முயன்றது. கிறிஸ்துவர்களும், அனிமிஸ்ட்ஸ் என்ற மதத்தவரும் அதிகம் இருந்த தெற்கு சூடானில் இந்தத் திணிப்பு கிளிர்ச்சியாக வெடித்தது. பின்னர் 1989-ல் ஆளுங்கட்சியும் தெற்கின் எதிர்ப்புக் குழுக்களுக்கும் அமைதி உடன்படிக்கை ஏற்படுத்தின.

அப்போது அரசியல் ரீதியாகவும், மதம் சார்ந்தும், ராணுவம் ரீதியாகவும் பலம் பொருந்தியவராக இருந்த ஒமர் அல் பஷீர் ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்தி ராணுவத் தளபதியாகவும், பிரதமராகவும் பிரகடனம் செய்து கொண்டார். ஆனால், 1996-க்குப் பின்னர் அல் பஷீர் தொடர்ந்து தன்னை அதிபராக நிலைநிறுத்திக் கொண்டார். 1996-க்குப் பின்னர் அங்கு தேர்தலே நடைபெறவில்லை.

இந்நிலையில், 2019-ம் ஆண்டு அந்த நாட்டின் அதிபர் ஒமர் அல்-பஷீர் நடத்தி வந்த சர்வாதிகார ஆட்சி மக்கள் போராட்டத்தால் அகற்றப்பட்டது. இதன்பின் புதிய அரசை அமைப்பதற்கான ஜனநாயக ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, ராணுவம் நாட்டைக் கைப்பற்றியது. இதனால், சூடான் ராணுவத்துக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2003-ல் பூதாகரமாக வெடித்த கலவரங்களுக்குப் பின்னர் சூடானில் இதுவரை 40 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 20 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இன அழிப்புச் சம்பவங்கள் இன்றுவரை நடந்தேறி வருகிறது. அங்கே எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச பேரும் பசி, பட்டினி, சுத்தமான குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

சூடானில் விவசாய நிலம் நிறைய இருந்தாலும் கூட அங்கே தங்கச் சுரங்கங்களும், எண்ணெய் வளம் நிறைந்த பகுதிகளும் நிறைய இருக்கின்றன. சூடானில் பருத்தி, நிலக்கடலை விளைவிக்கப்படுகிறது. சூடானின் ஏற்றுமதி வருவாயில் 73 சதவீதம் எண்ணெய் ஏற்றுமதி வாயிலாக கிடைக்கின்றது. எல்லா வளமும் இருந்தும் சூடான் உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில்தான் இருக்கிறது. காரணம், அங்கே நிலையான ஆட்சி இல்லை. ஜனநாயக அரசு இல்லை. சிறு குழுக்களும், கிளிர்ச்சியாளர்களும், ராணுவமும்தான் ஆதிக்கம் செலுத்த முடிகிறது.

விவசாயம், வர்த்தகம், எண்ணெய் வளம் எல்லாமே ராணுவம் தனது அதிகாரத்தை குவித்துவைத்துக் கொள்வதற்கான ஆதாரமாக சுருட்டிக் கொள்ளப்படுகிறது. பசியும் பட்டினியும் நோயும் வறட்சியும் மட்டுமே மக்களுக்கு கிடைக்கிறது. சூடானுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் இன்றளவும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x