Published : 11 Apr 2023 09:46 AM
Last Updated : 11 Apr 2023 09:46 AM

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையா? - அமெரிக்காவில் நிர்மலா சீதாராமன் விளக்கம்

பீட்டர்சன் சர்வதேச பொருளாதார நிறுவன கருத்தரங்கில் பங்கேற்ற நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

வாஷிங்டன்: இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறைகள் நிகழ்வதாகக் கருதுவது மேற்கத்திய நாடுகளின் தவறான கண்ணோட்டம் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற பீட்டர்சன் சர்வதேச பொருளாதார நிறுவனத்தின் கருத்தரங்கில் கலந்து கொண்டு, அதன் தலைவர் ஆதம் எஸ் போசென் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். வெளிநாட்டு முதலீடுகளை இந்தியா அதிக அளவில் ஈர்க்க முடியாததற்கு, இந்தியாவின் கண்ணோட்டமே காரணம் என கூறலாமா என்ற கேள்விக்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், ''இது பொய் என்பதற்கு இந்தியாவுக்கு வந்து கொண்டிருக்கும் முதலீட்டாளர்களே சாட்சி. முதலீடுகளை ஈர்ப்பதில் ஆர்வமுள்ள நபர் என்ற முறையில், நான் ஒன்றை கூற விரும்புகிறேன். இந்தியாவை நேரில் பார்க்காமல், இந்தியா குறித்து பல்வேறு அறிக்கைகளைத் தயாரிப்பவர்கள் கூறுவதைக் கேட்பதைக் காட்டிலும், இந்தியாவுக்கு நேரில் வந்து அங்கு என்ன நடக்கிறது என்பதை நேரில் பார்த்து அறிந்து கொள்வது சரியாக இருக்கும்'' என தெரிவித்தார்.

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறைகள் நிகழ்வதாக வெளியாகும் செய்திகளுக்கு என்ன பதில் கூறுவீர்கள் என்ற ஆதம் எஸ் போசென்னின் கேள்விக்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், ''இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடு இந்தியா. இந்தியாவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. நீங்கள் கூறுவது உண்மை என்றால், 1947ல் இருந்ததைவிட தற்போது இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிக அளவில் எவ்வாறு உயர்ந்திருக்க முடியும்?

பாகிஸ்தானின் நிலையோடு ஒப்பிட்டுப் பாருங்கள். அந்த நாட்டில் சிறுபான்மையினரின் எண்ணிக்கை மிகப் பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. சிறிய காரணங்கள், சொந்த பகை போன்றவற்றுக்குக் கூட சிறுபான்மையினருக்கு எதிராக மத நிந்தனைச் சட்டம் பிரயோகிக்கப்படுகிறது. உரிய விசாரணை இன்றியே பாகிஸ்தானில் சிறுபான்மையினர் தண்டிக்கப்படுகிறார்கள்.

அதுமட்டுமல்ல, பாகிஸ்தானில் வாழும் இஸ்லாமியர்களைவிட இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் சிறப்பாக தொழில் செய்கிறார்கள். குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். அவர்களின் கல்விக்காக இந்திய அரசும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது. 2014ல் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகான காலத்தை எடுத்துக்கொண்டால்கூட, இந்தியாவில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை குறைந்துள்ளதா? எந்த குறிப்பிட்ட சமூகத்திலாவது மரண விகிதாச்சாரம் அதிகரித்துள்ளதா? இந்தியா குறித்து கருத்துருவாக்கம் செய்பவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் இந்தியாவுக்கு வாருங்கள். நேரில் பார்த்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள்'' என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x