Published : 11 Apr 2023 08:16 AM
Last Updated : 11 Apr 2023 08:16 AM
இஸ்லாமாபாத்: இந்தியாவைப் போல் ரஷ்யா விலிருந்து மலிவான விலையில் கச்சா எண்ணெயை பாகிஸ்தானும் இறக்குமதி செய்ய வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வீடியோ செய்தியின் மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் தெரிவித்துள்ளதாவது.
இந்தியா மலிவு விலையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை மேற்கொண்டு வருகிறது. அதைப் போலவே, பாகிஸ்தானும் ரஷ்ய கச்சா எண்ணெய்யை மலிவு விலை யில் பெற விரும்பினோம். ஆனால் அந்த எண்ணம் ஈடேற வில்லை. துரதிர்ஷ்டவசமாக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் எனது தலைமையிலான அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. இவ்வாறு இம்ரான் கான் கூறினார்.
23 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்ட பாகிஸ்தானைச் சேர்ந்த முதல் பிரதமர் என்ற பெருமை இம்ரான் கானுக்கு உண்டு.
பிரதமர் மோடிக்கு பாராட்டு
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தையும் மீறி ரஷ்யாவிலிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் முடிவை மேற்கொண்டதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தைரியத்தை இம்ரான் கான் மனதார பாராட்டினார். ஆனால் இது முதல்முறை அல்ல.
இதற்கு முன்னதாக 2022 செப்டம்பரில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய இம்ரான் கான் "உலகில் நவாஸைத் தவிர வேறு எந்தத் தலைவருக்கும் கோடிக்கணக்கான சொத்துகள் இல்லை. பாகிஸ்தானை தவிர எந்தவொரு நாட்டின் பிரதமரோ அல்லது தலைவரோ நாட்டிற்கு வெளியே கோடிக்கணக்கான சொத்துகளை குவித்தது கிடையாது. நமது அண்டை நாடான இந்தியாவின் பிரதமர் மோடிக்கு எத்தனை சொத்துகள் வெளி நாடுகளில் உள்ளன?’’ என்று பாராட்டி பேசியிருந்தார்.
இந்தியா அதன் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்கிறது. ரஷ்யா-உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டதையடுத்து, அதிக தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கும் முடிவை ரஷ்யா எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT