Published : 04 Apr 2023 05:50 PM
Last Updated : 04 Apr 2023 05:50 PM
கொழும்பு: இலங்கையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா உதவ வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே கேட்டுக்கொண்டுள்ளார்.
நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் தலைவர் பாரத் லால் தலைமையிலான இந்திய தூதுக்குழு 2 நாள் பயணமாக கடந்த 1ம் தேதி இலங்கை சென்றது. இக்குழு, தலைநகர் கொழும்புவில், அதிபர் ரணில் விக்ரமசிங்கேவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தச் சந்திப்பு குறித்து பாரத் லால் விடுத்துள்ள அறிக்கை விவரம்: ''இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்தபோது அவர், இலங்கைக்கான தனது தொலைநோக்குப் பார்வை குறித்தும், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டு வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வருவது குறித்தும் இந்திய தூதுக்குழுவிடம் விரிவாக விளக்கினார்.
மேலும், கொள்கை சீர்த்திருத்தங்கள், டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாடு, திறன் வளர்ப்பு, நல்லாட்சி, துறைசார் வல்லுநர்களை உருவாக்குவதற்கான அமைப்புகளை உருவாக்குதல், பொதுமக்களுக்கு திட்டமிட்ட கால வரையறைக்குள் சேவைகளை வழங்குதல் ஆகியவற்றை மையப்படுத்தியே அவரது உரையாடல் இருந்தது. அப்போது, சமூக - பொருளாதார முன்னேற்றத்திலும், பொருளாதார வளர்ச்சியிலும் இந்தியா அடைந்து வரும் முன்னேற்றங்களை ரணில் விக்ரமசிங்கே வெகுவாக பாராட்டினார். மேலும், இந்த விவகாரங்களில் இந்தியா இலங்கைக்கு உதவ வேண்டும் என்றும், ஆட்சி மற்றம் பொதுக் கொள்கைக்காக இலங்கையில் பல்கலைக்கழகம் அமைக்க உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அப்போது, நரேந்திர மோடி குஜராத் முதல்வராக பொறுப்பேற்றபோது, எதிர்மறை பொருளாதார வளர்ச்சியில் அந்த மாநிலம் இருந்ததையும், பின்னர் மக்களை மையப்படுத்திய கொள்கைகளை அமல்படுத்தியதன் மூலம் அம்மாநிலம் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியது குறித்தும் இந்திய தூதுக்குழு விளக்கியது. மேலும், பிரதமரான பிறகு நரேந்திர மோடி எவ்வாறு நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை, பொறுப்பேற்பு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றுக்கு உயர் முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தி வருகிறார் என்பது குறித்தும் இந்திய தூதுக்குழு, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிடம் எடுத்துரைத்தது'' என்று பாரத் லால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT