Published : 03 Apr 2023 04:13 PM
Last Updated : 03 Apr 2023 04:13 PM
ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் எந்த அளவு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்; அதற்கான சூழல் எந்த அளவு இருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு மகிழ்ச்சியான நாடுகளை தரவரிசைப்படுத்தி ஐ.நா. வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், ஐரோப்பிய நாடான பின்லாந்து முதலிடம் பிடித்தது.
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடம் பிடிப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் 5 முறை பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறது. இந்த நிலையில், ஐ.நா.வின் கூற்றுபடி பின்லாந்து மக்கள் உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பது குறித்து நியுயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு, பின்லாந்தில் உள்ள தனிநபர்களிடம் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது
ஆய்விற்காக பின்லாந்து மக்களிடம் பேசும்போது, உண்மையில் இந்தப் பட்டியல் யதார்த்ததுக்கு முரணானது என அவர்கள் பதிலளித்துள்ளனர். பின்லாந்தை சேர்ந்த ஆங்கில ஆசிரியர் நினா ஹன்சன் கூறும்போது, “நான் மகிழ்ச்சியாக உணரவில்லையே” என்றார். இன்னும் சிலர் சமூகப் பாதுகாப்பு ரீதியாக பின்லாந்து மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று கூறுகின்றனர். மற்றும் சிலர் “இல்லை, நாங்கள் பதற்ற உணர்வுகளுக்கும், தனிமைக்கும் ஆளாகி இருக்கிறோம்” என்று கூறுகின்றனர்.
மேலும், பின்லாந்தில் வளர்ந்து வரும் வலதுசாரி கட்சிகளின் ஆதிக்கம், உக்ரைன் போர் , நேட்டோவுடன் இணைவது போன்றவை அந்நாட்டு மக்களை கவலையடைய செய்துள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர்.
பின்லாந்தில் கறுப்பின மக்கள் சற்று தனிமை உணர்வை உணர்ந்துள்ளதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். மாணவியான கிளாரா பாசிமகி கூறும்போது, "நாங்கள் மிகவும் பாக்கியமானவர்கள். இதன் காரணமாகவே நாங்கள் சிலவற்றில் அதிருப்தியுடன் இருக்கிறோம் என்று கூற பயப்படுகிறோம். எங்களைவிட மோசமான நாடுகள் பல உள்ளன” என்றார்.
பின்லாந்து மக்கள் மகிழ்சியுடன் இருக்கிறார்கள் என்றால், அதற்கு பல்வேறு பதில்கள் கிடைக்கின்றன. ஆனால் கல்வி , சமூகப் பாதுகாப்பு சார்ந்து பிற நாடுகளை ஒப்பிடும்போது பின்லாந்து பல படிகள் முன்னேறி இருப்பதை மறுப்பதற்கில்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT