Published : 19 Sep 2017 09:13 PM
Last Updated : 19 Sep 2017 09:13 PM
வடகொரியா தனது அணுகுண்டுச் சவாலை நிறுத்தவில்லையெனில் அந்நாட்டை அமெரிக்கா முற்றிலும் அழித்தொழிக்கும் நிலைக்குத் தள்ளப்படும் என்று ஐநா.வில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்-ஐ ‘ராக்கெட் மனிதன்’ என்று வர்ணித்த ட்ரம்ப், வடகொரிய அதிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று சாடினார்.
ஐநா- அரங்கில் இவ்வாறு அதிபர் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையை அடுத்து உரத்த முணுமுணுப்புகள் எழுந்தன. வடகொரியாவின் சமீபத்திய செயல்பாடுகள் உலகையே அச்சுறுத்துவதாக ஐநா கூறியததையடுத்து ட்ரம்ப் இத்தகைய கடும் எச்சரிக்கையை வடகொரியாவுக்கு விடுத்துள்ளார்.
வடகொரியா தன் அணு ஆயுத நோக்கங்களிலிருந்து பின்வாங்கவில்லையெனில், “வடகொரியாவை முற்றிலும் அழிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்றார்.
மேலும், வடகொரியா அதிபரை, “அந்த ராக்கெட் மனிதன் தற்கொலை முயற்சி செய்து வருகிறார்” என்று அவரது ராணுவ நடவடிக்கைகளை வர்ணித்தார்.
அதிபர் ட்ரம்ப் பேசும்போது வடகொரிய இளம் தூதர் முதல் வரிசையில் அமர்ந்திருந்ததாக ஐநா தெரிவித்துள்ளது.
அதே போல் இரானுடன் முந்தைய அதிபர் ஒபாமா மேற்கொண்ட அணு ஒப்பந்தம் ஒரு தர்மசங்கடம் என்றும் அது வரும் அக்டோபர் மத்தியில் இறுதியடைகிறது அந்த ஒப்பந்தத்தை நீட்டிக்கப்போவதில்லை என்று அறிவித்தார் ட்ரம்ப்.
இரானை ‘பொருளாதார ரீதியாக நலிவடைந்த ரோக் நாடு’ என்றார்.
அதே போல் வெனிசூலா பற்றி கூறும்போது அந்நாடு சீரழிவுப்பாதையில் போவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றார்.
நான் அனைத்தையும் விட அமெரிக்க நலன்களுக்கே முக்கியத்துவம் அளிப்பேன். ஆனால் மற்ற நாடுகளுக்காக எங்கள் கடமைகள நிறைவேற்றுவதில் அனைவரது நலன்களையும் நாங்கள் உணர்ந்திருக்கிறோம். எதிர்காலத்தில் அனைத்து நாடுகளும் இறையாண்மை பொருந்தியதாகவும் வளத்துடனும் பாதுகாப்புடனும் திகழ அமெரிக்கா உதவும், என்றார் அதிபர் ட்ரம்ப்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT