Published : 28 Mar 2023 04:30 PM
Last Updated : 28 Mar 2023 04:30 PM

“சிறுவர்கள் பள்ளிக்குச் செல்வதை பார்க்கும்போது மனம் உடைகிறது” - ஆப்கன் சிறுமிகளின் துயரக் குரல்

கோப்புப் படம்

"நான் பள்ளிக்குச் சென்றுவிடுவேன் என்ற நம்பிக்கையில்தான் ஒவ்வொரு நாளும் எழுகிறேன். தலிபான்கள் பள்ளிக்கூடம் திறக்கப்படும் என்று கூறுகிறார்கள்; ஆனால் இரண்டு வருடங்களாக பள்ளிக்கூடம் திறக்கவில்லை. நாங்கள் இனியும் அவர்களை நம்பபோவதில்லை. இந்த நிலை என் இதயத்தை உடைக்கிறது. எங்களுக்கு முன்னராவது சிறிய சுதந்திரம் இருந்தது, தற்போது அதுவும் பறிக்கப்பட்டுவிட்டது” என்கிறார் 17 வயதான ஹபிபா.

ஹபிபா உட்பட ஆப்கானைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சிறுமிகள், தலிபான்களின் முடிவால் பள்ளிக்கூடம் செல்ல முடியாமல் வீட்டிலே அடைப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அவர்கள் அறிவித்தனர். எனினும், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது என்றும், பெண் கல்வி; பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், அவர்களின் அறிவிப்புக்கு மாறாக தலிபான் நிர்வாகம், ஆப்கானிஸ்தானில் சிறுமிகள் உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்வது தடை விதித்தது. பல்கலைகழங்களிலும் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

வெறும் ஆரம்ப பள்ளிகளில் மட்டுமே சிறுமிகள் கல்வி கற்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் தலிபான்கள் தங்கள் முடிவிலிருந்து பின்வாங்காமல் உள்ளனர். கல்வி மறுக்கப்பட்டது குறித்து தமனா என்ற ஆப்கன் சிறுமி கூறும்போது, “இங்குள்ள சிறுவர்கள் பள்ளிக்கு செல்வதையும் அவர்கள் விரும்புவதை செய்வதையும் பார்க்கும்போது என் மனம் காயமடைகிறது. எனது சகோதரன் பள்ளிக்கு செல்வதை பார்க்கும்போது என் மனம் உடைகிறது. எங்களுக்கு அவர்களை போல் உரிமைகள் இருக்க வேண்டும்” என்கிறார்.

“கல்வியின்றி இந்த வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இருக்க போவதில்லை. இந்த வாழ்க்கையை விட மரணமே மேலானது” என கண்ணீருடன் கூறுகிறார் மஹ்தப் என்ற சிறுமி.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க விதிக்கப்பட்டுள்ள தடையை தலிபான்கள் நீக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் உட்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், சிறுமிகளின் வாழ்க்கையில் கல்வி இன்றையமையாதது, அதனை தலிபான்கள் தடுக்கக் கூடாது என்று ஆப்கன் கல்வியாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், சிறுமிகளை மீண்டு பள்ளிக்கு அனுப்புவது குறித்து தலிபான்கள் நிர்வாகத்திலிருந்து இதுவரை சரியான பதில் கிடைக்கவில்லை. கண்ணீருடன் தங்கள் நாட்களை கடந்து கொண்டிருக்கும் ஆப்கன் சிறுமிகளின் நிலை இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய உரிமைப் பறிப்பாக பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x