Published : 28 Mar 2023 03:16 PM
Last Updated : 28 Mar 2023 03:16 PM

“கரோனா முதலில் பரவியது எப்படி? உண்மையைச் சொல்லி ஆக வேண்டும்...” - பாரிஸ் விஞ்ஞானி

பாரிஸ்: “விலங்குகளிடமிருந்தே கரோனா வைரஸ் மனிதர்களுக்குப் பரவியது என்ற தனது ஆராய்ச்சி முடிவு பொய்யல்ல. உண்மையானது” என்று பாரிஸ் விஞ்ஞானி ஃப்ளாரன்ஸ் டெபார் தெரிவித்துள்ளார்.

2019 டிசம்பரில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான உயிர்களைப் பறித்துவிட்டது. இன்னமும் கூட கரோனா அச்சுறுத்தல் முழுமையாக தீர்ந்துவிடவில்லை என்றே உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கின்றது. இந்நிலையில், கரோனா வைரஸ் வூஹான் உணவுச் சந்தையில் இருந்த விலங்குகள் மூலமே மனிதர்களுக்குப் பரவியது என்று பிரான்ஸ் நாட்டின் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கான தேசிய மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான ஃப்ளாரன்ஸ் டெபார் கூறியிருந்தார்.

தனது ஆராய்ச்சி முடிவுகளை உறுதி செய்யும் விதமான தரவுகள் சீன விஞ்ஞானிகள் சிலரால் Gisaid வைரலாஜி டேட்டாபேஸில் இருந்ததாகவும், ஆனால் அதை தான் வெளியுலகிற்கு சொன்னபோது அவை நீக்கப்பட்டுவிட்டதாகவும் கூறும் டெபார், தரவுகள் நீக்கப்பட்டதால் தனது கூற்று போலியானதாகிவிடாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அந்தத் தரவுகள் எல்லாமே சீன விஞ்ஞானிகள் கடந்த 2020-ஆம் ஆண்டு சேகரித்த மாதிரிகளின் மரபணு வகைப்பாடு சார்ந்தவை. அதன்படி ரக்கூன் நாய் என்ற விலங்குகளிடமிருந்து எடுக்க உமிழ்நீர், ரத்த மாதிரிகளில் கரோனா வைரஸ் இருப்பது பற்றி சீன விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர் என்றும் ஃப்ளாரன்ஸ் கூறுகிறார்.

இது குறித்து தி கார்டியன் நாளிதழுக்கு அவர் அளித்தப் பேட்டியில், "நான் நேற்றிரவு கண்ணீர்விட்டு கதறினேன். சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி கேவலமாக விமர்சித்திருந்தனர். நான் பொய் சொல்லாதபோது என்னைப் பொய்யர் என்று எல்லோரும் கூறியிருந்தனர். ஒரு தொழில்முறை நிபுணருக்கு உண்மையாக இருத்தல் அவசியம்.

நான் பொய் சொல்லவே இல்லை. முதலில் Gisaid வைராலஜி டேட்டாபேஸில் நிச்சயமாக சீன விஞ்ஞானிகளின் ஆய்வு அறிக்கை இருந்தது. அவர்கள் ரக்கூன் நாய் பற்றி கூறியிருந்தனர். அதைப் பார்த்த தருணம் என் வாழ்வின் உணர்வுபூர்வமான தருணம். ரக்கூன் நாய்கள் மட்டும் தான் கரோனா வைரஸ் பரவலுக்குக் காரணம் என்பதை உறுதி செய்யும் ஆராய்ச்சிகள் இல்லை என்றாலும் கூட வூஹான் சந்தையில் ரக்கூன் நாய்கள் இருந்தது சீன விஞ்ஞானிகள் ஆய்வறிக்கையின் மூலம் உறுதியாகி உள்ளது. எனது ஆராய்ச்சியும் வூஹான் உணவுச் சந்தையில் இருந்த ரக்கூன் நாய்களிடமிருந்து கரோனா பரவியதா என்பதைப் பற்றியதே.

நானும் எனது குழுவினரும் ஜிசெட் வைராலஜி டேட்டாபேஸில் சீன விஞ்ஞானிகளிடம் அவர்கள் பகிர்ந்திருந்த தகவலை ஆய்வு செய்ய அனுமதி கேட்டோம். அவர்களும் கொடுத்தார்கள். ஆனால், அந்த ஆய்வறிக்கை திடீரென மாயமானது. அதைப் பற்றி நாங்கள் ஆச்சரியப்படவில்லை. ஆனால், அதிர்ச்சியடைந்தோம். இது மிகவும் சிக்கலான விவகாரம். ஆனால், நான் பொய் சொல்லவில்லை என்பது மட்டுமே உண்மை" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x