Published : 22 Mar 2023 10:13 AM
Last Updated : 22 Mar 2023 10:13 AM
கராச்சி: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
6.5 ரிக்டர்: அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையமானது நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக இருந்தது என்றும் பூமிக்கு அடியில் 116 மைல் தொலைவில் மையம் கொண்டிருந்தது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானின் ஹிண்டுகுஷ் மலைகளின் தெற்கு தென் கிழக்கு பகுதியை ஒட்டிய ஜுர்ம் நகரில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் 100க் கணக்கானோர் காயம்: பாகிஸ்தானின் கைபர் பக்துவான் மாகாணத்தில் மட்டுமே 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அவசரநிலை துறை செய்தித் தொடர்பாளர் பிலால் ஃபைசி தெரிவித்துள்ளார். வடமேற்கு பாகிஸ்தானில் பாதிப்பு சற்று அதிகமாக இருப்பதாகவும் அவர் கூறினார். சில இடங்களில் பூகம்பத்தால் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது என்றார். மாகாண பேரிடர் மேலாண்மைத் துறை செய்தித் தொடர்பாளர் டைமூர் கான் கூறுகையில்,"வடமேற்கு பகுதியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் 19 மண் வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இன்னும் பாதிப்புகள் பற்றிய தகவல்களை திரட்டி வருகிறோம்" என்றார்.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஷராஃபத் ஜமான் அமர் கூறும்போது, "இதுவரை 2 பேரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 20 பேர் காயமடைந்துள்ளனர். ஆனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சுகிறோம்" என்றார்.
அச்சத்தில் ஆப்கன் மக்கள்: ஆப்கானிஸ்தானின் காபூல் நகரைச் சேர்ந்த அய்ஸிமி கூறுகையில், "நிலநடுக்கம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது. நாங்கள் உயிர்பிழைக்க மாட்டோம் என்றே நினைத்தோம். ஆனால் எப்படியோ தப்பித்துவிட்டோம்" என்றார். 45 வயதான அஜீஸ் அகமது, "என் ஆயுள் காலத்தில் நான் இதுபோன்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததில்லை. பல மணி நேரத்திற்கு மீண்டும் மீண்டும் நில அதிர்வுகள் வந்து அச்சுறுத்தின" என்றார்.
கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பூகம்பத்தை முன் கூட்டியே கணித்துச் சொல்லியிருந்த புவியியல் ஆராய்ச்சியாளர் ஆப்கானிஸ்தான், இந்தியாவிலும் நிலநடுக்கங்களுக்கு வாய்ப்புள்ளதாகக் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் இந்தியத் தலைநகர் டெல்லியிலும் ஒருசில பகுதிகளில் லேசாக உணரப்பட்டதாகத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT