Published : 24 Sep 2017 07:29 AM
Last Updated : 24 Sep 2017 07:29 AM
புதிய நடுத்தர தொலைவு ஏவுகணை ஒன்றை நேற்று சோதனை செய்ததாக ஈரான் அறிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்ய நேரிடலாம் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் இந்த சோதனையை நடத்தியுள்ளது.
கொரம்ஷாகர் என்ற இந்த ஏவுகணை நேற்று முன்தினம் டெஹ்ரானில் ராணுவ அணிவகுப்பில் இடம்பெற்றது.
இந்நிலையில் நேற்று இந்த ஏவுகணையை ஈரான் வெற்றிகரமாக சோதித்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் வெளியானது. ஈரான் இதற்கு முன் நடத்திய ஏவுகணை சோதனைகள் தொடர்பாக அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும் இந்தச் சோதனைகள், 2015-ல் ஈரான் - வல்லரசு நாடுகள் இடையே ஏற்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிரானது என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இந்த விவகாரத்தில் அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்வோம் என்றும் அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அணு ஆயுதங்களை ஏவும் தொழில்நுட்பத் திறனை இந்தச் சோதனை மூலம் ஈரான் பெற்றுவிடும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஏற்ப ஈரான் நடப்பதாக அதிபர் ட்ரம்ப் கருதுகிறாரா, இல்லையா என்பதை அமெரிக்க நாடாளுமன்றத்தில் அக்டோபர் 15-ம் தேதி தெரிவிக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை என்று ட்ரம்ப் கூறினால் அந்நாடு மீது புதிய தடை விதிக்கவும் அணுசக்தி ஒப்பந்தம் ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT