Published : 20 Mar 2023 08:54 AM
Last Updated : 20 Mar 2023 08:54 AM
லண்டன்: பஞ்சாபில் ‘வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பைச் சார்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து லண்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் இந்திய தூதரக அலுவலகத்தினுள் நுழைந்து அங்கே இருந்த மூவர்ணக் கொடிகளை அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்தியாவுக்கு பிரிட்டிஷ் துணை தூதர் கிறிஸ்டினா ஸ்காட்டிற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியது. அப்போது அவரிடம், லண்டனில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் வெளியில் இருந்த இந்திய தேசியக் கொடியை காலிஸ்தான் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தியது தொடர்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கூடவே இவ்விவகாரத்தில் தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பிரிட்டன் அரசு தவறிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. கூடவே இச்சம்பவம் தொடர்பாக பிரிட்டன் அரசு முழு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. பிரிட்டன் அரசாங்கத்தின் அணுகுமுறையை முழுக்க முழுக்க எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
போராட்டத்தின் பின்னணி: விவசாயிகளின் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த பஞ்சாபி நடிகர் தீப் சித்து கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் ‘வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்பை தொடங்கினார். டெல்லி செங்கோட்டை வன்முறை வழக்கில் அவர் முதல் எதிரியாக சேர்க்கப்பட்டார். எதிர்பாராதவிதமாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஹரியாணாவில் ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து ‘வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் பதவியேற்றார். அவர் பொறுப்பேற்றது முதல் காலிஸ்தான் பிரிவினைவாத கொள்கைகள் தலைதூக்கின. கடந்த மாதம் அவரது ஆதரவாளரை அமிர்தசரஸ் புறநகர் போலீஸார் கைது செய்தனர். அப்போது கத்தி, துப்பாக்கி ஏந்திய ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தை அம்ரித்பால் சிங் முற்றுகையிட்டார். இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இதன்படி பஞ்சாப் மாநிலத்துக்கு மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 10 கம்பெனிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், அவரை போலீஸார் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் போலீஸ் வளையத்தில் இருந்து அவர் தப்பியோடிவிட்டார்.
பஞ்சாப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கைகளைக் கண்டித்தே லண்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியத் துணைத் தூதரகத்தில் அத்துமீறி நுழைந்து தேசியக் கொடியை அகற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT