Published : 15 Mar 2023 08:48 PM
Last Updated : 15 Mar 2023 08:48 PM
ஹாங்காங்: சார்ஸ் பாதிப்பு குறித்து உலகறிய செய்தச் சீன மருத்துவர் ஜியாங் யான்யோங் காலமானார். அவருக்கு வயது 91. அவரது மறைவை சீன தேச ஊடகங்கள் மற்றும் அவரது நண்பர்கள் உறுதி செய்துள்ளனர்.
2003-ல் சார்ஸ் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது சீனாவில் சார்ஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என சொல்லி இருந்தார் அப்போதைய சீன சுகாதாரத் துறை அமைச்சர். அதை கேட்டு பதறிய மருத்துவர் ஜியாங் யான்யோங், தனக்கு தெரிந்தே சார்ஸ் பாதிப்புடன் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தனி வார்டில் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்திருந்தார். அது குறித்து சீன ஊடகங்களுக்கு கடிதம் எழுதினார். ஆனால், அந்த தகவலை சீன தேச ஊடகங்கள் அப்போது புறக்கணித்தன. இருந்தபோதும் அந்த கடிதத்தின் தகவல் சர்வதேச ஊடகத்தின் வசம் கசிந்தது. அதன் வழியே உலகம் சார்ஸ் குறித்து அறிந்து கொண்டது. அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் தகவல்.
பின்னர் சீன தேச அரசு அதை ஒப்புக்கொண்டது. தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு இதில் தலையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கொண்டு வந்தது. மேலும், அதன் விளைவாக சீன தேச சுகாதார அமைச்சர் மற்றும் பீஜிங் மேயரின் பதவி பறிக்கப்பட்டது. ‘உலகை காக்க வேண்டுமென்ற எண்ணத்தில் நான் இந்த தகவலை வெளியிட்டேன்’ என அப்போது ஜியாங் யான்யோங் தெரிவித்தார்.
தொடர்ந்து 1989-ல் தியனன்மென் சதுக்கத்தில் போராடிக் கொண்டிருந்த அப்பாவி மக்கள், போராட்டக்காரர்கள் மற்றும் மாணவர்கள் மீது சீன கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய அடக்குமுறை குறித்து அவர் எழுதி இருந்தார். அன்றைய தினம் ராணுவம் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பீஜிங்கில் அறுவை சிகிச்சை நிபுணராக சிகிச்சை அளித்த அனுபவத்தையும் அவர் தெரிவித்திருந்தார். அதையடுத்து அந்தக் கட்சி வருத்தம் தெரிவித்தது.
1931-ல் ஹாங்சோவில் பிறந்தவர் மருத்துவர் ஜியாங் யான்யோங். தனது அத்தை காசநோயால் உயிரிழந்ததை பார்த்து மருத்துவராக வேண்டும் என்ற எண்ணத்தை அவர் பெற்றுள்ளார். அவர் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். அவரது தன்னலமற்ற பணிக்காக வாழ்நாளில் பலமுறை போற்றப்பட்டுள்ளார். அவருக்கு 2004-ல் பொது சேவைக்கான ராமன் மகசேசே விருது வழங்கப்பட்டது..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT