Published : 14 Mar 2023 05:38 AM
Last Updated : 14 Mar 2023 05:38 AM
லாஸ் ஏஞ்சல்ஸ்: 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' என்ற திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை
தட்டிச் சென்றுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்றது. இதில் ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை வென்றது. நேரடியாக ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய திரைப்படப் பாடல் என்ற பெருமையை, இந்தப் பாடல் பெற்றது.
முதுமலையில் தயாரான ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணக் குறும்படத்துக்கும் விருது கிடைத்தது. இந்த விழாவில், நடிகை தீபிகா படுகோன், ‘நாட்டு நாட்டு’ பாடலை அறிமுகப்படுத்திப் பேசினார். அவர் பேசும்போது, இந்தப் பாடலின் வேகமான நடன அமைப்பு, யூடியூப்பில் பெற்ற பார்வைகள் ஆகியவற்றைக்
குறிப்பிட்டார். மேலும் இந்திய தயாரிப்பில் இருந்து ஆஸ்கருக்கு வரும் முதல் பாடல்
இது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பின்னர் பாடகர்கள் காலபைரவா, ராகுல் ஆகியோர் ஆஸ்கர் மேடையில் நேரடியாக அந்தப் பாடலைப் பாடினர். அதற்கு நடனக் கலைஞர்கள் நடனமாடினர். பாடல் முடிந்ததும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
விருது விவரங்கள்
டேனியல் குவான், டேனியல் ஷைனட் இயக்கிய 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' (Everything Everywhere All at Once) படம், 7 விருதுகளைப் பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளது.
சிறந்த திரைப்படம், இயக்குநர், ஒரிஜினல் திரைக்கதை - டேனியல் குவான், டேனியல் ஷைனட், சிறந்த நடிகை - மிச்செல் யோ, துணை நடிகர் - கே ஹூய் குவான், துணை நடிகை - ஜேமி லீ கர்டிஸ், எடிட்டிங் - பால் ரோஜர்ஸ் ஆகிய விருதுகளை வென்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT