Published : 14 Mar 2023 06:02 AM
Last Updated : 14 Mar 2023 06:02 AM
வாஷிங்டன்: அமெரிக்காவில் மேலும் ஒரு வங்கி நிதி நெருக்கடியால் மூடப்பட்டுள்ளது. இதனிடையே, வாடிக்கையாளர் முதலீட்டை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு மத்திய வங்கியும் வைப்பு நிதி காப்பீட்டுக் கழகமும் உறுதி அளித்துள்ளன.
அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி (எஸ்விபி) சமீபத்தில் திவாலானது. இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் வங்கிகளின் பங்கு மதிப்பு கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்ட சிக்நேச்சர் வங்கியும் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதால் இதன் பங்கு விலையும் கடுமையாக சரிந்தது. இதனால் இந்த வங்கி நேற்று முன்தினம் மூடப்பட்டது.
இதையடுத்து, திவாலான வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை மீட்க அமெரிக்க நிதிஅமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. மேலும்மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் நலன் பாதுகாக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளன.
அமெரிக்க மத்திய வங்கி (பெடரல் ரிசர்வ்), மத்திய வைப்பு நிதி காப்பீட்டுக் கழகம் மற்றும் நிதித் துறை ஆகியவை கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமீபத்தில் திவாலான எஸ்விபி வாடிக்கையாளர்கள் முதலீட்டை திருப்பி எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படும். இப்போது மூடப்பட்டுள்ள சிக்நேச்சர் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் முதலீட்டை திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்கள் முதலீட்டை எடுக்க விரும்பினால், அதை வழங்க ஏதுவாக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு கூடுதல் நிதி வழங்கப்படும். வங்கிகள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
கடந்த 2008-ம் ஆண்டு ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு வங்கி துறையை பாதுகாக்க பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் வங்கித் துறை நெருக்கடியை சமாளிக்கும் திறனைப் பெற்றுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT