Published : 11 Mar 2023 08:06 PM
Last Updated : 11 Mar 2023 08:06 PM

சீனாவில் ‘விசித்திர’ மழை: புழுக்களிடம் இருந்து தப்பிக்க குடை பிடித்த மக்கள்?

பீஜிங்: சீன தலைநகர் பீஜிங்கில் வழக்கத்துக்கு மாறாக மழையுடன் புழுக்களும் சேர்த்து அடித்து வந்த நிகழ்வு நடைபெற்றுள்ளதாக சொல்லி சமூக வலைதளங்களில் வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

பீஜிங்கில் சமீபத்தில் பெய்த மழையில் மழையுடன் புழுக்களும் சேர்ந்து தரையில் விழுந்ததாக நம்பப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த மக்கள் தங்கள் கையில் குடைகளைப் பிடித்துக் கொண்டு சாலையில் நடப்பதாக தகவல் வெளியானது. சாலையின் ஓரங்களில் நிற்கப்பட்டுள்ள கார்கள் மற்றும் வாகனங்களின் மேலே மழை நீருடன் திரளான புழுக்களும் மிதக்கின்றன. ஆனால், இந்த விசித்திர மழை குறித்து சீன தேச அரசு தரப்பில் எந்த விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை. இதனால் மக்கள் குழப்பமான மன நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் ‘புழு மழை’ குறித்து விஞ்ஞானிகள் சிலர் கூறுகையில், "திடீரென உருவாகும் சூறாவளியால் இந்தப் புழுக்கள் நகருக்குள் காற்றில் அடித்து வந்திருக்கப்பட்டிருக்கலாம்" என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதே நேரத்தில் இது போலியான வீடியோ என சீன தேச பத்திரிக்கையாளர் ஷென் ஷுவே தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், பீஜிங் நகரில் மழை பதிவாகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அதில் சில வேடிக்கையானதாக உள்ளது. இந்தச் செய்தியை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x