Published : 11 Sep 2017 12:39 PM
Last Updated : 11 Sep 2017 12:39 PM
கரீபியன் தீவுகள் மற்றும் கியூபாவை தாக்கிய இர்மா சூறவாளி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தையும் புரட்டிப் போட்டுச் சென்றுள்ளது.
அட்லாண்டிக் கடலின் வரலாறு காணாத மிகப்பெரிய சூறாவளியான இர்மா, கரீபியன் தீவுகள் மற்றும் கியூபாவில் பல சேசதங்களை ஏற்படுத்தியது. இந்த சூறாவளியினால் கரீபியன் தீவுகளில் 24 பேர் பலியாகினர்.
இதனையடுத்து இர்மா புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை ஞாயிற்றுக்கிழமை தாக்கியது. அமெரிக்க வானியல் வல்லுநர்களின் கணித்தபடியே பலத்த சேதங்களை இர்மா சூறாவளி ஏற்படுத்திச் சென்றுள்ளது.
புளோரிடாவின் கடற்கரை பகுதிகளில் மணிக்கு 130 கிலோ மீட்டரில் வீசிய காற்றால் படகுகள் மற்றும் வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. இர்மா சூறாவளி காரணமாக புளோரிடாவில் பலியானவர்கள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.
இர்மாவின் காரணமாக புளோரிடாவின் மியாமி நகரில் பெய்த கனமழையில் சாலைகள் முழுவதும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றது. இதனால் மியாமி நகரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இர்மாவினால் பாதிப்படைந்துள்ளன. 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
புளோரிடா மாகாணத்தை இயற்கைப் பேரிடர் ஏற்பட்ட பகுதியாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். சுமார் 7,000 மீட்புப் படையினர் புளோரிடாவில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இர்மா சூறாவளி இன்று (திங்கட்கிழமை) மக்கள் தொகை அதிகம் காணப்படும் டம்பா மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் பகுதியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இர்மா சூறாவளி ஜார்ஜியா, மிசிசிப்பி, டென்னிசி ஆகிய பகுதிகளை தாக்கும் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT