Published : 04 Mar 2023 08:42 AM
Last Updated : 04 Mar 2023 08:42 AM
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஏற்பட்டிருந்த தோல் புற்றுநோய் பாதிப்பு சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை மருத்துவர் கெவின் தெரிவித்துள்ளார். இந்த சிகிச்சை கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல். மேற்கொண்டு அவருக்கு சிகிச்சை தேவையில்லை எனவும் மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்காவின் 46-வது அதிபராக கடந்த 2021-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறார் ஜோ பைடன். அவருக்கு வயது 80. இந்த சூழலில் அவருக்கு மார்பு பகுதியில் தோல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அது அகற்றப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் கெவின் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிபருக்கு ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பு பரவக் கூடியது இல்லை என்றும் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், அப்போது அவரது மார்பு பகுதியில் இருந்து அகற்றப்பட்ட சிறிய அளவிலான லிஷன் பயாப்ஸிக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிபர் ஜோ பைடன் போட்டியிட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த திட்டத்தில் அதிபரும் இருப்பதாக அதிபரின் மனைவி ஜில் பைடன் சொல்லியுள்ளார். இருந்தாலும் முறைப்படியான அறிவிப்பு வெளியானால் மட்டுமே இது உறுதியாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT