Published : 06 May 2017 09:24 AM
Last Updated : 06 May 2017 09:24 AM
அமெரிக்காவும், சீனாவும் அடுத்தடுத்து அமைதிக்குப் பாடுபடப் போவதாக அறிவிக்கின்றன. ஒருசில நாட்கள் இடைவெளியில் இரு நாடுகளும் சமாதானம் குறித்துப் பேசியது தற்செயலாக நடந்ததுதானா?
இந்தியா - பாகிஸ்தான் இடையே, காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் ஏற்பட சீனா உதவத் தயாராக இருப்பதாக, சீனப் பத்திரிகை ‘குளோபல் டைம்ஸ்' கட்டுரை வெளியிட்டு இருக்கிறது.
சீனாவின் முன்னணி பத்திரிகை யான ‘குளோபல் டைம்ஸ்', சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் ‘மக்கள் நாளிதழ்' குழுமத்தின் ஆங்கிலப் பதிப்பு ஆகும். ஆகவே இவ்விதழின் கட்டுரையை, சீன அரசின் ஒப்புதல் பெற்ற கருத்தாகக் கொள்வதில் தவறில்லை. அமைதி, சமரசம் போன்ற சொற்களில் சற்றும் நம்பிக்கை அற்ற சீனாவுக்கு ஏன் இந்த திடீர் ஆசை?
மேற்கத்திய நாடுகளுடன் இல்லாத பண்பாட்டு ஒற்றுமை இந்தியா சீனா இடையே இருக்கத்தான் செய்கிறது. எனினும் இரு நாட்டுக்கும் இடையே பிணக்குகள் முற்றி வருவதற்கு யார் காரணம்?
சமாதான உடன்படிக்கைக் கையெழுத்தின் ஈரம் காயும் முன்பே, இந்தியாவுக்குள் ஊடுருவிய கபடத்தனம், மாறாத களங்கமாக வரலாற்றில் நிலைத்து விட்டது. ‘இந்தியர் - சீனர் சகோதரர்கள்' என்கிற வாசகம் பொய்த்துப் போக யார் காரணம்?
கடந்த 58 ஆண்டுகளாக திபெத்திய மதகுரு தலாய்லாமா, தன் சொந்த மண்ணுக்கே போக முடியாமல் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்க யார் காரணம்? திபெத் மக்களின் உரிமையை மறுப்பது யார்? வடகொரியாவுக்கு மறைமுக ஆதரவு தந்து அணு ஆயுத நாடாக மாற்றி வருவது யார்? தென் சீனக் கடலைத் தன் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வர எத்தனிப்பது யார்? ஜப்பான் நாட்டுடன் தொடர்ந்து வம்பு செய்து வருவது யார்? பாகிஸ்தான், நேபாளம், இலங்கை நாட்டுடன் சேர்ந்து இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு மறைமுக ஆதரவு அளிப்பது யார்?
ஐ.நா.வில் இந்தியாவுக்கு நிலையான உறுப்பினர் அந்தஸ்து கிடைக்க விடாமல் தடுப்பது யார்?
‘காஷ்மீர்', இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இது பற்றி ‘பேச்சு நடத்தலாம்'; அதற்கு சீனா உதவும் என்று ‘யோசனை' சொல்கிறது கட்டுரை. சீனாவின் பாகிஸ்தான் ஆதரவு, உலகம் அறிந்ததுதானே?
அருணாச்சல பிரதேசத்தின் இந்தியப் பகுதிகளுக்கு சீனப் பெயர் வைப்பது; இந்திய வரைபடத்தைக் குறைத்துக் காட்டுவது என்று இந்திய விரோத செயல்களை வெளிப்படையாகச் செய்து வரும் சீன அரசு, சமரசத்துக்கு உதவுகிறேன் என்று ஏன் சொல்ல வேண்டும்? சமாதான முயற்சிக்கு இந்தியா வர மறுக்கிறது என்கிற தோற்றத்தை ஏற்படுத்துவது நோக்கமாக இருக்கலாம்.
தானாக ஒரு நாடு முன்வந்து ஒத்துழைப்பு தருவது, சந்தேகங் களுக்கே வழி வகுக்கும்.
சீனாவின் (அதிகாரபூர்வமற்ற) அறிவிப்பைத் தொடர்ந்து, இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினையில் சமரசம் ஏற்பட, தான் பணிபுரியத் தயாராக இருப்பதாக அமெரிக்கா சொல்கிறது. இரு நாட்களுக்கு முன்பு, பாலஸ்தீன அதிபர் மஹமூத் அப்பாஸ் முன்னிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு ட்ரம்ப், தன் ஆர் வத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
ட்ரம்ப்பின் அறிவிப்பு, சம்பந்தப் பட்ட இரு நாடுகளிடையே பெருத்த ஆர்வத்தைத் தூண்டியதாகத் தெரியவில்லை. அமெரிக்காவின் ஆதிக்க வெளியுறவுக் கொள்கை யில் எவ்வித மாற்றமும் இல்லாத வரையில், அதன் சமரச முயற்சிகள், எங்கும் எப்போதும் எடுபடப் போவது இல்லை.
இருக்கட்டும். அமெரிக்கா, சீனாவின் சமரசத் தூதுகளுக்கு, உலக நாடுகள் செய்ய வேண்டியது என்ன..? உடனடியாக ஆயுதப் பரவலைக் குறைக்க வேண்டும் என்று ஒரு பேச்சுக்குச் சொன்னாலும் போதும். இரு வல்லரசுகளும் ஒட்டு மொத்தமாக ஒதுங்கிக் கொள்ளும். ஆயுதக் குறைப்பை, கொள்கை அளவில் கூட ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத நாடுகள்தாம் அமெரிக்காவும் சீனாவும்.
இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நார்வே, ஜெர்மனி, தென்கொரியா, தென் ஆப்பிரிக்கா ஆகியன இணைந்து ஒரு புதிய உலக மன்றம் அமைக்கலாம். ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் சேர்ந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அமெரிக்கா, சீனாவுக்கு அது மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும்.
இந்தியச் சந்தை, பல நாடுகளின் கண்களை உறுத்திக்கொண்டு இருக்கிறது. இச்சந்தையை விட்டுவிட முன்னணி நாடுகளுக்கு மனமில்லை. எத்தனை கடுமையான வர்த்தக நிபந்தனைகளை விதித்தாலும் ஏற்றுக்கொண்டு இந்திய சந்தைக்குள் நுழைய அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் தயாராகவே இருக்கின்றன.
இதன் காரணமாகவே தன் பங்குக்கு, ‘நூல் விட்டு' பார்க்கிறது சீனா; குழப்பத்தில் குளிர் காய நினைக்கிறது அமெரிக்கா. அதற் கான கதை, வசனம், நடிப்புடன் களத்தில் குதித்து இருக்கின்றன அமெரிக்காவும், சீனாவும். இந்த ‘நாடகம்' எந்த அளவு வரவேற்பு பெறும்..?
இது, பிற நாடுகளின் எதிர் வினையைப் பொறுத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT