Published : 21 Feb 2023 03:53 PM
Last Updated : 21 Feb 2023 03:53 PM
அபுஜா: ஊழலை ஒழிப்பதற்காக நைஜீரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அந்நாட்டு மக்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். நைஜீரிய அரசால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் 200 நைரா, 500 நைரா, 1000 நைரா நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நெருக்கடிக்கு தள்ளப்பட்ட மக்கள் தங்களது ரூபாய் நோட்டுகளை பரிமாற்றம் செய்து கொள்ள வங்கிகளில் குவிந்துள்ளனர். எனவே, நாட்டில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. கோபமடைந்த மக்கள் ஏடிஎம் மற்றும் வங்கிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஆளும் கட்சியின் இந்த அறிவிப்பை எதிர்கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். அரசின் முடிவால் மக்கள் பதற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அன்றாட உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். பணமதிப்பிழப்பு குறித்து நைஜீரியர் ஒருவர் கூறும்போது, “எனது சம்பளம் கடந்த வாரம் வந்தது. ஆனால் இதுவரை என்னால் என் பணத்தை எடுக்க முடியவில்லை” என்றார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நிலவும் குழப்பம், கலவரங்கள் குறித்து அந்நாட்டு அதிபர் புஹாரி கூறும்போது, “திறமையற்ற வங்கிகள் தங்களைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டுள்ளன” என்று விமர்சித்தார்.
முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நைரா 200, நைரா 500 மற்றும் நைரா 1000 ஆகிய நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்ய விரும்புவதாக நைஜீரியாவின் மத்திய வங்கி அறிவித்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நைஜீரிய அதிபர் தேர்தல் வரும் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நைஜீரியாவில் பதற்றமான சூழல் உருவாகி இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT