Published : 21 Feb 2023 08:58 AM
Last Updated : 21 Feb 2023 08:58 AM

தந்தை அளித்த வரைபடத்தின் உதவியுடன் 80 ஆண்டுக்கு பிறகு போலந்தில் வெள்ளி புதையலை கண்டுபிடித்த மகன்

கேப் டவுன்: இரண்டாம் உலகப் போரின் போது, போலந்து நாட்டை கைப்பற்ற அப்போதைய சோவியத் யூனியன் படைகள் முன்னேறிக் கொண்டிருந்தன. அப்போது கிழக்குப் போலந்து பகுதியில் வசித்த ஆடம் கிஸாஸ்கி தனது 4 மகன்களை போலந்தை விட்டு வெளியேறும்படி செய்தார்.

அப்போது குடும்ப வெள்ளிப் பொருட்கள் அனைத்தையும் வீட்டின் பாதாள அறையில் புதைத்து விட்டு தப்பினர். இந்தச் சம்பவம் கடந்த 1939-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்துள்ளது.

போலந்தை விட்டு சென்ற 4 சகோதரர்களும் வேறு வேறு நாட்டில் தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில், ஆடமின் பேரன் ஜேன் என்பவர் வெள்ளி புதையலை கண்டுபிடித்துவிட்டார். இதுகுறித்து ஜேன் கூறியதாவது:

போலந்தில் வெள்ளிப் பொருட்களை புதைத்த இடம் குறித்து எனது தந்தை கஸ்டாவ் கையால் வரைபடம் ஒன்றை வரைந்து வைத்திருந்தார். அதை வைத்துக் கொண்டு கடந்த 2019-ம் ஆண்டு கிழக்கு போலந்து சென்று எங்கள் குடும்பம் இருந்த வீட்டை பார்த்தேன். அங்கு புதர் மண்டி கிடந்தது. பாதாள அறை எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் உள்ளூரில் பள்ளி முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற 92 வயது முதியவர் எங்களுக்கு உதவ முன்வந்தார். அவர் அளித்த தகவலின்படி தொடர்ந்து 3 நாட்கள் பாதாள அறையை தேடி கண்டுபிடித்துவிட்டோம். அங்கு புதைக்கப்பட்டிருந்த வெள்ளி பொருட்களையும் மீட்டோம். நிறைய வெள்ளி பொருட்கள் இங்கு புதைக்கப்பட்டிருந்தன. அதற்கும் மேலாக அந்தப் பொருட்கள் பல தலைமுறைகளை தாண்டிய பொக்கிஷங்கள். இவ்வாறு ஜேன் கூறினார்.

தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் பல்கலை சுற்றுச்சூழல் சட்டத் துறை பேராசிரியராகப் பணியாற்றியவர். அவரது சுவாரசியமான தகவல்களை கேப் டவுன் பல்கலை. தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறிய பால் குடுவை, தங்க சிலுவை பதிக்கப்பட்ட செயின், வேட்டையாடும் துப்பாக்கிகள் உட்பட பல பொருட்களை ஜேன் கண்டெடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x