Published : 21 Feb 2023 04:01 AM
Last Updated : 21 Feb 2023 04:01 AM

உக்ரைன் அதிபருடன் ஜோ பைடன் திடீர் சந்திப்பு - ரூ.4,135 கோடி மதிப்பு ஆயுதங்கள் வழங்குவதாக உறுதி

திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,அங்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். படம்: பிடிஐ

கீவ்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் சென்று, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ரூ.4,135 கோடி மதிப்புள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதாக அவர் உறுதி அளித்தார்.

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் கடந்த ஆண்டு பிப்.24-ம் தேதி தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகள் இடையிலான போர் ஓராண்டை நெருங்குகிறது. இந்த சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனின் அண்டை நாடான போலந்தில் பிப்.20,21, 22-ம் தேதிகளில் சுற்றுப் பயணம்செய்வார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவர் உக்ரைன் செல்வாரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அமெரிக்க அதிபர் மாளிகை திட்டவட்டமாக மறுத்தது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று முன்தினம் ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ சிறப்பு சிறப்பு விமானத்தில் வாஷிங்டனில் இருந்து போலந்துக்கு புறப்பட்டார். போலந்து தலைநகர் வார்சாவில் அவரது விமானம் தரையிறங்கியது. அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் 10 மணி நேரம் பயணம் செய்த பைடன், நேற்று காலை உக்ரைன் தலைநகர் கீவ் வந்தடைந்தார். அவரது பயணம்மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. விமானத்தில் பயணம்செய்தால், ரஷ்யாவின் வான்வழி தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் ரயிலில் அவர் உக்ரைன் சென்றதாக கூறப்பட்டது. ஒருவேளை, ரயில் மீது ரஷ்ய ராணுவம் திடீர்தாக்குதல் தொடுத்தால் அதை முறியடிக்க போலந்து, உக்ரைன் பகுதிகளில் அமெரிக்க ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

கீவ் ரயில் நிலையத்தில் இறங்கிய அதிபர் ஜோ பைடன், அங்கிருந்து சிறப்பு வாகனத்தில் மேரின்ஸ்கி அரண்மனைக்கு வந்தார். அவரை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்றார். இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியதாவது: ஓராண்டுக்கு முன்பு உக்ரைன் மீதுதாக்குதல் தொடங்கப்பட்டது. அந்த நாடு வீழ்ந்துவிடும் என்று சிலர் கூறினர்.ஆனால் ஓராண்டாக உக்ரைன் கம்பீரமாக எழுந்து நின்று போராடுகிறது. அமெரிக்கா மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகமும் உக்ரைனுக்கு துணை நிற்கிறது.

உக்ரைன் ராணுவத்துக்கு அதிநவீன ஹிமர் ஏவுகணைகள், கவச வாகனங்கள், வான்பரப்பை கண்காணிக்க அதிநவீன ரேடார்கள் வழங்கப்படும். கூடுதலாக 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,135 கோடி) மதிப்புள்ள ஆயுதங்களை வழங்குவோம். உக்ரைன் மக்களின் நலனுக்காக அமெரிக்க பட்ஜெட்டில் தாராளமாக நிதி ஒதுக்கப்படுகிறது.

உலக வரைபடத்தில் இருந்து உக்ரைனை அழித்துவிட வேண்டும் என்று ரஷ்யா விரும்பியது. ஆனால் அது நடக்கவில்லை. ரஷ்ய அதிபர் புதினின் கனவு தகர்ந்துவிட்டது. ரஷ்ய ராணுவம் ஆக்கிரமித்து வைத்த பகுதிகளில் பாதி மீட்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஓராண்டுக்கு முன்பு உக்ரைன் மீது போர் தொடுத்தார். ‘உக்ரைன் பலவீனமாக இருக்கிறது. மேற்கத்திய நாடுகளிடம் ஒற்றுமை கிடையாது. எனவே போரில் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம்’ என்று புதின் கனவு கண்டார். தனது கணிப்பு மாபெரும் தவறு என்பதை இப்போது உணர்ந்திருப்பார். புதின் என்ன நினைக்கிறார் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.

இப்போது ரஷ்யாவில் இருந்து திறமையான இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுகின்றனர். அவர்கள் போருக்கு அஞ்சி ஓடவில்லை. ரஷ்யாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பதால், தங்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தப்பிச் செல்கின்றனர்.

அடுத்த ஒரு வாரத்தில் ரஷ்யாவுடன் தொடர்புடைய அமைப்புகள், நிறுவனங்கள் மீது மேலும் கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும்.

இவ்வாறு பைடன் பேசினார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியபோது, ‘‘அமெரிக்க அதிபர் பைடனின் வருகை உக்ரைன் மக்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. எங்களுக்கு தேவையான ஆயுதங்களை வழங்குவதாக அவர் உறுதி அளித்ததற்கு நன்றி’’ என்றார்.

உக்ரைன் தலைநகர் கீவில் சுமார் 5 மணி நேரம் தங்கியிருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று மாலை ரயில் மூலம் போலந்துக்கு சென்றார்.

ஜோ பைடனின் உக்ரைன் பயணம் குறித்து ரஷ்ய தரப்புக்கு அமெரிக்க அரசு தரப்பில் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. இதனால், உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ரஷ்ய ராணுவம் நேற்று எவ்வித தாக்குதலும் நடத்தவில்லை என்றும் சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x