Published : 19 Feb 2023 04:04 PM
Last Updated : 19 Feb 2023 04:04 PM
சியோல்: எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜப்பான் கடலில் வடகொரியா ஏவுகணை பரிசோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள தென்கொரிய ராணுவம், “இன்று அதிகாலை 5.21 மணிக்கு வடகொரியாவால் ஏவப்பட்ட ஏவுகணை 900கிமீ பயணித்து ஜப்பன் கடலில் விழுந்தது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் அரசும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து வரும் மார்ச் மாதம் கடற்படை பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளன. கொரிய தீபகற்பப் பகுதியில் தங்களுக்கு உள்ள பலத்தைக் காட்டும் நோக்கில் இந்த பயிற்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏவுகணை சோதனையை நடத்தி இருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து வடகொரியா 10க்கும் அதிகமான ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. வடகொரியாவின் இந்த நடவடிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கரோனா பெருந்தொற்று காரணமாக வட கொரியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் கவனம் செலுத்தாமல் ஏவுகணை சோதனைகளை மேம்படுத்துவதிலேயே அந்நாடு கவனம் செலுத்துவதாக ஐ.நா. கடந்த ஆண்டு கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT