Last Updated : 18 Feb, 2023 06:22 PM

3  

Published : 18 Feb 2023 06:22 PM
Last Updated : 18 Feb 2023 06:22 PM

MH 370... அந்த மலேசிய விமானத்திற்கு என்னதான் ஆனது..?

கோப்புப் படம்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து நள்ளிரவு புறப்பட்ட MH 370 விமானம், அதன் இலக்கான பீஜிங்கை சென்றடைவில்லை. இதனால், பீஜிங் விமான நிலையத்தில் MH 370 விமானத்தில் பயணித்திருந்தவர்களை அழைப்பதற்காக காத்துக் கொண்டிருந்த உறவினர்கள் பதற்றத்துக்கு உள்ளாகினர். நேரம் செல்லச் செல்ல விமான நிலையத்தில் அழுகை சத்தங்கள் ஆக்கிரமிக்க தொடங்கின. எனினும், விமானத்தின் நிலை குறித்து உறுதியான தகவலை அப்போது மலேசிய அரசும் தெரிவிக்கவில்லை. சீன அரசும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து MH 370 விமானம் தாமதம் என்றே கூறப்பட்டு வந்தது. இறுதியில், விமானத் துறை அதிகாரிகள் முடிவுக்கு வந்தனர். கோலாலம்பூரிலிருந்து 239 பேருடன் புறப்பட்ட MH 370 விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்டது. உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்தன. இது நடந்த தினம் மார்ச் 8, 2014.

MH 370 விமானம் மாயமாகி 9 ஆண்டுகள் நெருங்கவுள்ளது. ஆனால், இதுவரை மாயமான விமானம் என்ன ஆனது என்ற தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை. இன்னமும் விமானத்தில் பயணித்த 239 பேரின் உறவினர்கள் ஆறாத வலியுடன் தங்களது நாட்களை நகர்த்தி வருகின்றனர். எனினும், என்றாவது ஒரு நாள் MH 370 விமானத்துக்கு என்ன ஆனது, எங்கு விழுந்தது போன்ற தகவல்கள் தங்களை வந்தடையும் என்று அவர்கள் நம்புகின்றனர். அவர்களின் நம்பிக்கை நிறைவேறுமா..?

மெய்நிகர், செயற்கை நுண்ணறிவு என அறிவியல் வளர்ச்சி உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டில் சுமார் 239 நர்களுடன் பயணித்த விமானம் என்ன ஆனது என்பதை 9 ஆண்டுகளாக கண்டறியமுடியவில்லை என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? இந்த விவகாரத்தில் பரந்த பார்வையில் சிந்தித்தால், எங்கோ ஒரு புள்ளியில் உண்மை வேண்டும்மென்றே மறைக்கப்பட்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது. ஆனால், இந்த உண்மையும் நாம் அறிவியல் மூலம்தான் கண்டறிய முடியுமே தவிர, இங்கு சதி கோட்பாடுகளால் அல்ல..!

உண்மையில் MH 370 விமானம் மாயமான சமயத்தில் மோசமான வானிலையால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. பின்னர், விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாக கூறப்பட்டது. ஆனால், இவற்றுக்கு சாத்தியங்கள் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கிய நிலையில், விமானத்தின் சிக்னல் தொடர்பற்று இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் எனக் கணிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியப் பெருங்கடலில் சுமார் 1,20,000 சதுரகிலோமீட்டர் பரப்பில் தேடுதல் வேட்டையை மேற்கொண்டது ஆஸ்திரேலியாவின் இணை ஒருங்கிணைப்பு மையம். நீண்ட நாட்கள் தேடுதலுக்குப் பின்னரும் இதனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. ரேடார்களும், சேட்டிலைட்டுகளும் MH 370 விமான விபத்தை கணிக்கத் தவறின.

MH 370 விமானம் காணாமல்போன நாள் முதலே பல புதிர்கள் அந்த விமானத்தை சுற்று வலம் வந்தன. அவற்றில் ஒன்று, அவ்விமானத்தில் போலி விசாவில் பயணித்த இரண்டு ஈரானிய இளைஞர்கள் விமானத்தைக் கடத்தி இருக்கலாம் எனக் கூறப்பட்டது. பின்னர், அதில் உண்மை இல்லை என ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்பட்டது. அடுத்தது விமானத்தில் சீன தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த 20 பேர் பயணித்திருந்தனர். அவர்களது லங்கேஜில் இருந்த லித்தியம் பேட்டரி உருகி, தீ விபத்து ஏற்பட்டு நடுவானில் விமானம் வெடித்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

அடுத்த சந்தேகம் விமானத்தின் பைலட்கள் மீது எழுந்தது. MH 370 விமானத்தின் தலைமை விமானி சஹாரி அகமத் ஷா. விமானம் செலுத்துவதில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ள ஷா மன அழுத்தத்தின் காரணமாக நடுவானில் தற்கொலைக்கு முயன்று விமான விபத்தை ஏற்படுத்தினாரா என்றும் அதிகாரிகள் கேள்விகள் எழுப்பினர். அதற்கும் விடையும் கிடைக்கவில்லை.

மேலும். MH 370 விமானத்தின் பாகங்கள் என்று கூறப்பட்ட பொருட்கள் மாலத்தீவு, மடாஸ்கர் பகுதியில் கிடைத்தன. ஆனால், அவை MH 370 விமானத்தின் பாகங்கள்தானா என்பதை இதுவரை உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இறுதியாக, விமானம் காணாமல்போன ஆண்டிலிருந்து இந்த முனை மட்டும் பொதுவெளியில் விவாதிக்கப்படாமல் மறைமுகமாகவே விவாதிக்கப்பட்டது. அது ’தியேகோ கார்சியா’. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளது இந்த தியேகோ கார்சியா தீவு. மாலத்தீவுகளிலிருந்து 2,000 கிமீ தொலைவில் இந்த தீவு அமைந்திருக்கிறது. பவள பாறைகள் நிறைந்துள்ள இந்தத் தீவு பொதுமக்கள் பார்வையிலிருந்து சற்று தள்ளி இருந்தாலும் அமெரிக்காவின் முக்கிய ராணுவ தளமாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இராக், சிரியா, ஆப்கானிஸ்தானுக்கு இங்கிருந்துதான் அமெரிக்காவின் போர் விமானங்கள் பயணிக்கின்றன. உலகப் பார்வையில் இது அமெரிக்காவின் ரகசியமான ராணுவ தளமாகவே இருந்து வருகிறது.

சரி, நாம் மையத்துக்கு வருவோம். ”MH 370 விமானத்தை ஒருவேளை தீவிரவாதிகள் கடத்தி தியேகோ கார்சியா தீவுக்கு செல்ல முயன்றபோது அமெரிக்க ராணுவம் விமானத்தை சுட்டு வீழ்த்தி இருக்கலாம். அதைத் தவிர, அமெரிக்காவுக்கு வேறு வாய்ப்பும் அங்கு இல்லை!” இதைதான் சர்வதேச நிபுணர்கள் பலரும் மறைமுகமாக நம்பி வருகின்றன.

எனினும், அவர்களது நம்பிக்கைகளுக்கு பல காரணங்கள் கூறபடுகின்றது. MH 370 விமானம் மாயமானபோது உலக நாடுகள் பலவும் கருத்து தெரிவித்த நிலையில், அமெரிக்கா முன்னுக்குப் பின் முரணாக அமைதி காத்தது. அமெரிக்காவின் மவுனம் சர்வதேச அரங்கில் பல கேள்வியையும் எழுப்பியது. மேலும், விமான விபத்தை தொடர்ந்து அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா, மலேசியாவுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டார். MH 370 விமான விபத்தை ஆராய்ச்சி செய்பவர்களுக்கு ஒபாமாவின் இப்பயணமும் பல கேள்விகளை எழுப்பியது. ஆனால், இவை எல்லாமே சாத்தியக்கூறுகள்தான். அதாவது, இது உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம்.

ஆனால், ஒருவேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அமெரிக்கா பல எதிர்வினைகளை சந்தித்திருக்கும். கடந்த ஆண்டு ஈரான், உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியது. இதில் பயணித்த 170 பயணிகளும் உயிரிழந்தனர். இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் சர்ச்சையையும், அதிர்வலையும் ஏற்படுத்தியது.

அப்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஈரானை கடுமையாக விமர்சித்தனர். அந்தச் சூழலில் ’தியேகோ கார்சியா’ சம்பவம் உண்மையாக இருப்பின், நிச்சயம் ஈரானும், ரஷ்யாவும் சர்வதேச நீதிமன்றத்தில் அமெரிக்காவை ஏற்ற தயங்கி இருக்காது. இவை நடக்கவில்லை. அப்படி என்றால், இதில் அமெரிக்காவுக்கு சம்பந்தம் இல்லை என நாம் கொள்ளலாமா?

இவ்வாறு மாயமான MH 370 விமானத்தைச் சுற்றிய சந்தேகங்கள் கேள்விக்குறிகளாகவே தொடர்ந்து வருகின்றனர்.

நீல , சிவ நிற கோடுகளை கொண்ட அந்த பிரமாண்டமான விமானம் எங்கு சென்றிருக்கும். எப்படி தடையங்கள் இல்லாமல் இந்த பூமியிலிருந்து மாயமாகி இருக்கும். அதில் பயணித்தவர்களுக்கான நீதி எங்கே? இதற்கான விடைகளை கூறாமலே தீர்க்கப்படாத வழக்காக மலேசிய அரசு முடித்து வைத்திருக்கலாம். ஆனால், காலமும் அறிவியலும் இதற்கான விடையை நிச்சயம் அளிக்கும்.

தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x