Published : 17 Feb 2023 12:34 PM
Last Updated : 17 Feb 2023 12:34 PM
வாஷிங்டன்: பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பாகிஸ்தான் தலிபான், ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் ஆர்மி ஆஃப் இஸ்லாம் ஆகியவற்றின் செயல்பாடுகள் மாறவில்லை என்றும், அவை பயங்கரவாத அமைப்புகளாகவே கருதப்படும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் அமைப்புகளை பல்வேறு நாடுகள் தடை செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் உலகின் மிகப் பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா பல்வேறு அமைப்புகளை தடை செய்துள்ளது. அதேநேரத்தில், அவற்றின் செயல்பாடுகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்து தனது முடிவை அறிவித்து வருகிறது.
அந்த வகையில், அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் தலிபான், ஹிஸ்புல் முஜாஹிதீன், ஆர்மி ஆஃப் இஸ்லாம் ஆகிய அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து அந்நாடு மறு ஆய்வு செய்தது. ஆய்வு முடிவில், இந்த அமைப்புகளின் அணுகுமுறையில் மாற்றம் இல்லாததால் அவற்றுக்கான தடையை தொடருவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும், அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையின் அடிப்படையிலும் தடையை தொடர முடிவு எடுக்கப்பட்டதாக ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். இதன்மூலம், இந்த அமைப்புகள் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கான பட்டியலில் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் பாதுகாப்பு நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT