Published : 16 Feb 2023 12:59 PM
Last Updated : 16 Feb 2023 12:59 PM
பியாங்யாங்: வடகொரியா வித்தியாசமான உத்தரவுகளுக்கு பெயர் பெற்ற நாடு. அந்த வகையில் புதிதாக ஒரு நூதன அறிவிப்பை வெளியிட்டுள்ளது வடகொரியா. அந்த உத்தரவின்படி, அந்நாட்டு தலைவர்களின் பெயரை இனி அந்நாட்டு மக்கள் வைப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது கிம்மின் மகளின் பெயரை வைத்திருக்கும் பெண்கள், சிறுமிகள் தங்கள் பெயரை மாற்றிக் கொள்ளுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வடகொரியா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கிம் ஜு ஏ என்ற பெயருள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் பெயரை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். ஒருவாரத்திற்குள் அவர்கள் தங்கள் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிம் தனது குழந்தைகளின் புகைப்படங்களை கடந்த சில ஆண்டுகளாக வெளியிடாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் சில மாதங்களாக கிம்மின் மகள் கிம் ஜு ஏ பொதுவெளியில் தனது தந்தையுடன் வலம் வருவதை பார்க்க முடிகிறது.
வடகொரியா தீவிரமான கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் நாடு. அங்கு ஊடகங்களின் செய்திகூட அரசின் தணிக்கைக்குப் பின்புதான் வெளியாகும். கிம்மின் தந்தையும் முன்னாள் அதிபருமான 2-ம் கிம் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறந்தார். அவர் உயிரிழந்த 2 நாட்களுக்குப் பின்புதான் அந்த செய்தி வெளியுலகிற்கே தெரிந்தது. ஆதலால் வடகொரியாவிலிருந்து எளிதாக எந்த செய்தியும் கசிந்துவிடாது.
மேலும் அங்கு அரசுக்கு எதிரான நடவடிக்கைகளைல் ஈடுபடும் மக்களுக்கு மரண தண்டனைகளும் அவ்வப்போது வழங்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின. இதனை சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கடுமையாக விமர்சித்தன. ஆனால் இந்த குற்றச்சாட்டை வடகொரியா மறுத்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT