Published : 15 Feb 2023 01:32 PM
Last Updated : 15 Feb 2023 01:32 PM
லெலிங்டன்: நியூசிலாந்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியது. இதனை அரசு நிலநடுக்க ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. அதிக நிலநடுக்கங்கள் ஏற்படக் கூடிய பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர் எனப்படும் பகுதியில் நியூசிலாந்து அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஊடகங்கள், "நியூசிலாந்தில் வெலிங்டன் பகுதிக்கு உட்பட்ட லோயர் ஹட் நகரின் வடகிழக்குப் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியது. நிலநடுக்கம் சுமார் 30 நொடிகள் நீடித்தது. பராபரமுவிலிருந்து வடமேற்கே 50 கிமீ தொலைவில் இதன் மையம் இருந்துள்ளது, 48 கிமீ ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி இருந்துள்ளது..
சுமார் 60,000 மக்கள் இந்த நில அதிர்வை உணர்ந்துள்ளனர். நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை" என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளன.
#Earthquake confirmed by seismic data.⚠Preliminary info: M6.1 || 78 km NW of Lower Hutt (New Zealand) || 5 min ago (local time 19:38:07). Follow the thread for the updates pic.twitter.com/QLRK4EGfmz
நியூசிலாந்தில் சமீபத்தில் ஏற்பட்ட கேப்ரியேல் புயலினால் அம்மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் இந்த நிலநடுக்கம் மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. புயலால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்நாட்டு மக்களை இன்னொரு இயற்கைப் பேரிடர் சீண்டியுள்ளது
முன்னதாக கடந்த பிப்.6 ஆம் தேதி துருக்கி - சிரிய எல்லையில் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தால் இதுவரை 41,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT