Published : 15 Feb 2023 08:52 AM
Last Updated : 15 Feb 2023 08:52 AM
துபாய்: பறக்கும் கார்களை பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டுவர உலகநாடுகள் முயற்சி மேற்கொண்டுவரும் நிலையில்,, “2026-ம் ஆண்டுக்குள் துபாயில் பறக்கும் டாக்ஸிகள் அறிமுகப்படுத்தப்படும்” என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான சேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.
பறக்கும் டாக்ஸிகளுக்கான நிலையங்கள் (வெர்டிபோர்ட்) அமைக்க அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் வழங்கினார். முதற்கட்டமாக பறக்கும் டாக்ஸி சேவையானது துபாய் சர்வதேச விமான நிலையம், டவுன்டவுன் துபாய், பாம் ஜுமேரா, துபாய் மெரினா ஆகிய 4 பகுதிகளை இணைக்கும் வகையில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறக்கும் டாக்ஸி சேவை குறித்து துபாயின் பொதுப் போக்குவரத்து ஆணையத்தின் சிஇஓ அகமது கூறுகையில், “ஒரு பைலட், 4 பயணிகள் அமர்ந்து பயணிக்கும் வகையில் பறக்கும் டாக்ஸி இருக்கும். மணிக்கு 300 கிமீ வேகத்தில் செல்லும். துபாய் - அபுதாபி,உட்பட மற்ற அமீரகங்களுக்கு இடையே சேவை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இது பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் அபுதாபிக்கு 30 நிமிடத்தில் சென்றுவிட முடியும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT