Published : 12 Feb 2023 07:38 AM
Last Updated : 12 Feb 2023 07:38 AM

துருக்கி பூகம்பத்தில் உயிரிழந்த மகளின் கையை பிடித்து அமர்ந்திருந்த தந்தை

கரமன்மராஸ்: துருக்கியின் கரமன் மராஸ் பகுதியில், நெஞ்சை உருக்கும் ஒரு காட்சியை ஏஎஃப்பி நிறுவனத்தின் போட்டோகிராபர் ஆடம் அல்தான் பார்த்துள்ளார். பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட அந்த பகுதியில் மீட்பு குழுவினர் வந்து சேரவில்லை.

இடிந்து நொறுங்கிய கட்டிடத்துக்கு வெளியே கடும் குளிரில் ஒருவர் மிகுந்த சோகத்துடன் அமர்ந்திருந்தார். அருகே சென்று பார்த்த போதுதான், இடிபாடுகளுக்கு இடையே தெரியும் விரல்களை பிடித்தபடி அவர் அமர்ந்திருந்தது தெரிந்தது. இந்த சோக காட்சியை தூரத்தில் இருந்து படம்பிடித்தார் ஆடம் அல்தான்.

போட்டோகிராபரை அருகில் வர சொன்ன அந்த நபர், ‘எனது குழந்தையையும் போட்டோ எடுங்கள்’ என இடிபாடுகளுக்கு இடையில் தெரியும் விரல்களை காட்டியுள்ளார். அதிகாலையில் பூகம்பம் ஏற்பட்டபோது அந்த நபரின் 15 வயது மகள் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். மேற் கூரை இடிந்து அவர் மீது விழுந்ததில் அவர் இறந்துவிட்டார். கட்டில் உடைந்து படுக்கையுடன் பால்கனி வழியாக வெளியே தெரிகிறது. அதில் அந்த சிறுமியின் விரல்கள் மட்டும் தெரிகின்றன.

தனது பெயர் மெசட் ஹேன்சர் என்றும், உடல் நசுங்கி இறந்து கிடப்பது தனது 15 வயது மகள் இர்மாக் என்று மட்டும் அவர் கூறினார். அதற்கு மேல் அவரால் பேசவும் முடியவில்லை, போட்டோகிராபரால் கேள்வி கேட்க வும் முடியவில்லை. இருவரும் கண்ணீர் சிந்தியபடி பிரிந்தனர். இந்த போட்டோ உலகம் முழுவதும் உள்ள ஊடகங்களில் வெளியாகி காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x