Published : 12 Feb 2023 12:24 AM
Last Updated : 12 Feb 2023 12:24 AM
மாலத்யா: துருக்கி பூகம்பத்தில் காணாமல் போன இந்தியரின் உடல் கண்டெடுக்கப்பட்டது
துருக்கி - சிரிய எல்லையில் கடந்த 6-ம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட இரு பயங்கர பூகம்பம் ரிக்டர் அளவில் 7.8, 7.5 என்ற அளவில் பதிவானது. பூகம்பத்துக்கு இதுவரை 25,000-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். பூகம்ப மீட்புப் பணிகளில் உதவிட இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட மீட்புக் குழு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. துருக்கியில் இந்திய மீட்பு குழுவினர் ‘ஆபரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
துருக்கியில் பூகம்பம் பாதித்த பகுதியில், பெங்களூரை சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர் ஒருவரை வர்த்தகப் பணிக்காக அனுப்பியிருந்தது. உத்தராகண்ட்டைச் சேர்ந்த விஜய் குமார் என்ற அந்த நபரை கடந்த 4 நாட்களாக கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது குடும்பத்தினரும், பெங்களூரைச் சேர்ந்த நிறுவனத்திடமும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்பில் இருந்து அவ்வப்போது தகவல்களை வழங்கிவந்தது.
இதனிடையே, விஜய் குமார் உடல் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூகம்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியான மாலத்யாவில் உள்ள ஒரு ஹோட்டலின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து அவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஹோட்டலில் தான் அவர் தங்கியிருந்துள்ளார். அடையாளம் காண முடியாத அளவுக்கு முகம் நசுக்கப்பட்ட நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. என்றாலும், கையில் அவர் குத்தியிருந்த "ஓம்" என்ற பச்சையை அடையாளம் இந்திய தூதரக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
விஜய் குமார், உத்தராகண்ட் மாநிலம் பவுரி மாவட்டத்தில் உள்ள கோட்வாரில் உள்ள பதம்பூர் பகுதியில் வசித்து வந்தார். பெங்களூரைச் சேர்ந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர், வணிக ரீதியாக துருக்கிக்கு பயணமாகிய சமயத்தில் தான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து அவரின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
துருக்கி பூகம்பத்துக்கு பலியான ஒரே இந்தியர் விஜய் குமார் மட்டுமே. துருக்கியின் தொலைதூரப் பகுதியில் இந்தியர்கள் 10 பேர் பூகம்பத்தில் சிக்கியிருந்தாலும் அவர்கள் பத்திரமாக இருக்கின்றனர். துருக்கியின் அதானா கரில் இந்தியா சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள் 75 பேர் இந்த கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் மற்றும் உதவிகளை கேட்டுள்ளனர். துருக்கியில் இந்தியர்கள் சுமார் 3,000 பேர் உள்ளனர். இவர்களில் 1,800 பேர் இஸ்தான்புல் நகரை சுற்றிலும், 250 அங்காரா பகுதியிலும், மற்றவர்கள் துருக்கியின் பல பகுதிகளிலும் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT