Published : 11 Feb 2023 02:23 PM
Last Updated : 11 Feb 2023 02:23 PM
புதுடெல்லி: இந்தியா எங்களுக்கு மிகவும் முக்கியமான நாடு என்று இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் இலாஹி தெரிவித்துள்ளார்.
ஈரானில் ஷா ராஜ்ஜியத்தை இஸ்லாமிய புரட்சி மூலம் வீழ்த்தியதன் 44-வது ஆண்டு விழா புதுடெல்லியில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதையடுத்துப் பேசிய இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் இலாஹி, ஈரானின் வளர்ச்சி குறித்தும், இந்திய - ஈரான் உறவு குறித்தும் எடுத்துரைத்தார். அவர் பேசியதாவது: ''சந்தேகமே இல்லாமல், ஈரானுக்கு மிகவும் முக்கியமான நாடு இந்தியா. ஈரான் அதிபர் ரைசி - இந்திய பிரதமர் மோடி இடையே கடந்த ஆண்டு சமர்கண்ட்டில் நடைபெற்ற சந்திப்பு இதற்கு மிகப் பெரிய நிரூபணம். அதோடு, இரு நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கு இடையே நிகழ்ந்து வரும் பயணங்களும் இதை நிரூபித்து வருகின்றன.
இந்தியாவுக்கும் ஈரானுக்கும் வரலாற்றுத் தொடர்பும், பொதுவான அம்சங்களும் நிறைய இருக்கின்றன. இதைச் சொல்வதில் நான் பெருமை கொள்கிறேன். சுதந்திரமாக இயங்கக்கூடிய அணுகுமுறை, பொருளாதார வளம் ஆகியவை இரு நாடுகளையும் தேசிய பங்குதாரர்களாக மாற்றி இருக்கின்றன. இரு நாட்டு உயர் அதிகாரிகளிடையேயான உறவும், வர்த்தக உறவும் மிகப் பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
இரு நாட்டு உறவில் எரிபொருளுக்கு எப்போதுமே மிகப் பெரிய பங்கு உண்டு. இதில் வெளிநாட்டு அழுத்தங்கள் தற்போது பிரச்சினையை உருவாக்குகின்றன. இருந்தும், இந்திய - ஈரான் உறவில் எரிபொருள் முக்கிய பங்கினை வகித்து வருகிறது. தன்னாட்சிக்கான இந்தியாவின் வியூகம், இதில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காணும் என்ற நம்பிக்கை உள்ளது. இரு நாட்டு ஒத்துழைப்பில் தொடர்பு மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்திய பெருங்கடலையும் மத்திய ஆசியாவையும் இணைக்கும் நோக்கில் ஈரானின் சபஹார் துறைமுக மேம்பாட்டுக்கான பணிகளை இந்தியா மேற்கொண்டு வருவது மிக முக்கிய நடவடிக்கை.
The celebration of 44th anniversary of the victory of Islamic revolution in Iran#IR44 pic.twitter.com/qsFlha7KJg
— Iran in India (@Iran_in_India) February 11, 2023
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கடந்த 40 ஆண்டுகளாக ஈரான் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டி இருக்கிறது. ஈரானில் அறிவியல், பொருளாதாரம், தொழில்நுட்பம் ஆகியவை மிகப் பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளன. கல்வி மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ளது. தற்போது 95 சதவீத மக்கள் கல்வி அறிவு பெற்றுள்ளனர். கல்வி அறிவில் சர்வதேச அளவில் ஈரான் 16வது இடத்தில் உள்ளது. பெண்கள் முன்னேற்றமும் ஈரானில் மேம்பட்டுள்ளது. மாணவர்களில் 55 சதவீதம், மருத்துவர்களில் 40 சதவீதம், பல்கலைக்கழக பேராசிரியர்களில் 33 சதவீதம் பேர் பெண்கள்'' என்று அவர் பேசினார்.
இதனிடையே, ஈரானின் தேசிய தினத்தை முன்னிட்டு இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் இலாஹியை, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையேயான பண்பாட்டுத் தொடர்பும், வர்த்தக உறவும் இரு நாட்டு மக்களுக்கும் பலன்களை அளித்து வருவதாக தனது வாழ்த்துச் செய்தியில் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
Greetings to FM @Amirabdolahian and the Government and the people of Iran on their National Day.
Our civilisational connect and close partnership will continue to benefit our two peoples. pic.twitter.com/1GW8Kz80ER— Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 11, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT