Published : 10 Feb 2023 05:24 PM
Last Updated : 10 Feb 2023 05:24 PM

சூரியனின் ஒரு சிறு பகுதி உடைந்ததா? - அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்; கவனம் ஈர்த்த வீடியோ

சூரியனின் ஒரு பகுதி திடீரென உடைந்து, அதனால் சூரியனின் வட துருவத்தில் ஒரு பெரிய நெருப்பு சூறாவளி ஏற்பட்டு, அது மேற்பரப்பில் சுழன்று வருவதால் விஞ்ஞானிகள் கலக்கமடைந்துள்ளனர்.

சூரியன் எப்போதுமே தன்னகத்தே பல்வேறு சுவாரஸ்யங்கள், புதிர்களை உள்ளடக்கிய நட்சத்திரமாகவே இதுவரை இருக்கிறது. அவ்வப்போது சூரியனைப் பற்றி சில விந்தையான விஷயங்களையும் அறிவியல் அறிஞர்கள் நமக்குப் பகிர்வது உண்டு. சூரியனைப் பற்றி தொடர்ச்சியாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வப்போது சூரியனில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய சில அரிய தகவல்கள், படங்களை ‘நாசா’ நமக்கு பகிர்வது உண்டு. சூரியனின் மேலே பாம்பு போல் நெளிந்து ஓடிய புயல், சிரிப்பதுபோல் காட்சியளித்த சூரியன் என பல புகைப்படங்கள் நம் பார்வைக்குக் கிடைப்பது உண்டு.

இப்போதும் ஒரு விஷயம் சூரியனைப் பற்றி வெளிவந்துள்ளது. சூரியனின் மேற்பரப்பிலிருந்து ஒரு பெரிய துண்டு உடைந்துவிட்டதாகவும், அது அதனுடைய வட துருவப் பகுதியில் ஒரு பெரும்புயலைப் போல் சுற்றி வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது எப்படி நடந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் ஒருபுறம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க, இன்னொரு புறம் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வாயிலாக பதிவு செய்யப்பட்ட அந்தக் காட்சியை விண்வெளி ஆராய்ச்சியாளர் டாக்டர் தமிதா ஸ்கோவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில் அவர் போலார் வோர்டக்ஸ் பற்றிதான் எல்லாப் பேச்சும் நடைபெறுகிறது. சூரியனின் வடக்குப் பக்கத்தின் மேற்பரப்பில் ஒரு பெரிய துண்டு உடைந்துவிட்டது. அது இப்போது போலார் வார்டக்ஸாக சூரியனின் வட துருவத்தில் சுற்றி வருகிறது. இதன் தாக்கத்தை பற்றிதான் ஆராய்ந்து வருகிறோம் என்று எழுதியுள்ளார்.

சூரியனில் அவ்வப்போது இவ்வாறான சூறாவளிகள் ஏற்படும். இந்த சூரியப் புயலால் தகவல் தொழில்நுட்ப தொடர்புகள் பாதிக்கப்படும். ஆனால், இப்போது சூரியனின் வடக்குப் பகுதியில் அதிலிருந்து ஒரு துண்டே உடைந்து, அதனால் பெரிய அளவில் சூறாவளி எழுந்து, அது சூரியனின் வட துருவத்தின் மேலே நெருப்பாய் சுழன்று கொண்டிருக்க, அது பூமிக்கு என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x