Published : 08 Feb 2023 06:26 AM
Last Updated : 08 Feb 2023 06:26 AM
அங்காரா: சிரியாவின் அசாஸ் நகரில் பூகம்பத்தால் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. அந்த நகரில் பெரும்பாலான வீடுகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. கட்டிட இடிபாடுகளில் இருந்து நேற்று 7 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார். சிறுமியின் தாய், தந்தை, உறவினர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டனர். என் அம்மா எங்கே எனறு சிறுமி தேம்பி தேம்பி அழுது கொண்டே இருக்கிறாள். அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் மீட்புப் படை வீரர்கள் தவித்து வருகின்றனர்.
சிரியாவை சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, “உள்நாட்டுப் போரால் சிரியா மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் இயற்கை பேரிடரும் எங்களை தாக்கியிருக்கிறது. பூகம்பம் பாதித்த பல கிராமங்களுக்கு எங்களால் செல்ல முடியவில்லை. அந்த கிராமங்களின் நிலைமை என்ன என்பது தெரியவில்லை" என்று தெரிவித்தார்.
துருக்கியின் அஜ்மரின் நகரை சேர்ந்த பர்ஹாத் கூறும்போது, “கடந்த திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு வீ்ட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்த சப்தம் கேட்டு எழுந்தேன். யாரோ வெளியில் இருந்து கல் வீசியிருக்கிறார் என்றேமுதலில் கருதினேன். ஆனால் வீட்டின் தரை பயங்கரமாக அதிர்ந்தது. வெளியே ஓடிவந்து பார்த்தபோது ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகி இருந்தன. நான், மனைவி, பிள்ளைகள் வெளியே ஓடி தப்பித்தோம். வயதான எனது தாய், தந்தை வெளியே ஓடி வருவதற்குள் வீடு இடிந்து உயிரிழந்துவிட்டனர்" என்று தெரிவித்தார்.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியை சேர்ந்த ஒரு பெண் கூறியதாவது: பூகம்பம் ஏற்பட்ட பகுதிகளில்ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளன. சாலை, தெருக்களில் அமைக்கப்பட்டிருக்கும் கூடாரங் களில் மக்கள் தங்கியுள்ளனர். இரவில் கடும் குளிர் நிலவுகிறது. சில நேரங்களில் மழை பெய்கிறது. அனைத்து துன்பங்களையும் சகித்து வாழ்கிறோம்.
கடந்த மாதம் நான் தங்கியிருந்த வீட்டுக்கு 4,500 லிரா (ரூ.19,700) வாடகை அளித்தேன். அந்த வீடு பூகம்பத்தில் இடிந்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக நானும் எனது குடும்பமும் உயிர்தப்பிவிட்டோம்.
இப்போது புதிதாக வாடகைக்கு வீடு தேடி அலைகிறோம். ஆனால் வீட்டின் மாத வாடகையாக 30,000 லிரா (ரூ.1.31 லட்சம்) கேட்கின்றனர். இப்போதைய நிலையில் இந்த வாடகையை கொடுக்க முடியாது. எனவே தொடர்ந்து நிவாரண முகாமில் தங்கியிருக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அந்த பெண் தெரிவித்தார்.
துருக்கியின் சான்லியூர்பா நகரில் செய்தி சேகரிக்கும் ‘ஸ்கை நியூஸ்' தொலைக்காட்சி சேனலின் செய்தியாளர்கள் கூறியதாவது: துருக்கியில் பூகம்பம் பாதித்த பகுதிகளில் உணவு, குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதன்காரணமாக மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் சூறையாடப்பட்டு உள்ளன. உயிரிழந்தவர் களின் உடல்கள் பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு ஒட்டுமொத்தமாக அடக்கம் செய்யப்படுகின்றன. நிவாரண முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லாததால், ஏராள மானோர் கார், வாகனங்களில் தங்கியுள்ளனர். இவ்வாறு செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
நிவாரண முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லாததால், ஏராளமானோர் கார், வாகனங்களில் தங்கியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT