Published : 08 Feb 2023 06:04 AM
Last Updated : 08 Feb 2023 06:04 AM
புதுடெல்லி: எஸ்-400 ஏவுகணையின் 3-வதுதொகுப்பு, இந்தியாவுக்கு விரைவில் விநியோகிக்கப்பட உள்ளதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர்டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 என்ற அதி நவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளை 5 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்க இந்தியா கடந்த 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. அமெரிக்காவின் பொருளாதார தடை எச்சரிக்கையையும் மீறி இந்த ஏவுகணைகளை இந்தியாவுக்கு ரஷ்யா விநியோகம் செய்தது.
இந்த ஏவுகணையின் முதல்தொகுப்பு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வந்தது. அந்த எஸ்-400 ஏவுகணை தற்போது சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளது. ரஷ்யா அனுப்பிய 2-ம் கட்ட ஏவுகணைகள் பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இந்நிலையில் இந்தியா-ரஷ்ய உறவுகள் குறித்த கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது. இதில் இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் எஸ்-400 ஏவுகணையின் 3-வது தொகுப்பு எப்போது இந்தியாவுக்கு வழங்கப்படும் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் கூறியதாவது:
எஸ்-400 ஏவுகணையின் 3வதுதொகுப்பு இந்தியாவுக்கு விரைவில் விநியோகிக்கப்படும். இந்த ஒப்பந்தத்தை விரைவில் முடிக்க இருதரப்பும் உறுதியுடன் உள்ளன. அதை நாங்கள் நிச்சயம் செய்வோம். இதை யாரும் தடுக்க முடியாது. இந்தியா-ரஷ்யா இடையேயான ராணுவ உறவு இதற்கு முன் இல்லாத வகையில் உள்ளது.
இந்தியாவில் டி-90 டேங்க், சுகாய் போர் விமானங்கள் மற்றும் ஏகே-203 ரைபிள்கள் தயாரிப்பு திட்டம் போன்றவை இந்தியாவில் தயாரிக்கும் விதிமுறைகளுடன் முழுவதும் ஒத்துப்போகின்றன.
இந்தியாவும் - ரஷ்யாவும் இணைந்து தயாரித்த பிரம்மோஸ் ஏவுகணை முன் மாதிரியாக திகழ்கிறது. எஸ்-400 ஏவுகணை உட்பட அனைத்து ஒப்பந்தங்களையும் நிறைவேற்றுவதில் இந்தியாவும், ரஷ்யாவும் உறுதியுடன் உள்ளன. ரஷ்யா - உக்ரைன் இடையிலான சண்டையை நிறுத்துவதற்கு யார்முன்வந்தாலும், அதை திறந்த மனதுடன் வரவேற்கிறோம். இதில் இந்தியா தீவிரம் காட்ட விரும்பினால், அது குறித்து நிச்சயம் பரிசீலிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT