Published : 08 Feb 2023 04:14 AM
Last Updated : 08 Feb 2023 04:14 AM

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து 312 முறை நிலநடுக்கம் - உயிரிழப்பு 5,200 ஆக அதிகரிப்பு

துருக்கியின் அடானா விமான நிலையத்தில் தரையிறங்கிய இந்திய ‘ஜம்போ’ விமானத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் இறக்கப்படுகின்றன. படம்: பிடிஐ

அங்காரா: துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 312 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இரு நாடுகளிலும் 5,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும் என்று அஞ்சப்படுகிறது.

துருக்கியின் காஜியன்டப் நகரை மையமாக கொண்டு நேற்று முன்தினம் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.8 ஆக பதிவானது. இந்த பூகம்பத்தால் துருக்கியின் 10 மாகாணங்கள் மற்றும் அண்டை நாடான சிரியாவின் வடக்கு பகுதியில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. பெரிய பூகம்பத்தை தொடர்ந்து துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து 312 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அலகில் 4 முதல் 7.5 வரை பதிவாகியுள்ளது.

துருக்கியில் இதுவரை 3,549 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். துருக்கி ராணுவம், போலீஸ்,தீயணைப்பு படை என 26,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இரவு, பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளிநாடுகளை சேர்ந்த 4,000 பேரும் மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

சிரியாவின் வடக்கு, கிழக்கு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. சிரியா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஓரளவுக்கு மீட்பு பணிகள் நடைபெறுகின்றன. ஆனால் கிளர்ச்சிப் படைகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள் பேரழிவில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றன. சிரியாவில் இதுவரை 1,712 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்த நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் மூத்தஅதிகாரி கேத்தரின் கூறும்போது, ‘‘துருக்கி, சிரியாவில் அறிவிக்கப்பட்டிருக்கும் உயிரிழப்பு எண்ணிக்கையைவிட 8 மடங்கு அதிக பாதிப்பு இருக்கும் என்று கருதுகிறோம்’’ என்றார்.

துருக்கியில் 3,549 பேர், சிரியாவில் 1,712 பேர் என இதுவரை 5,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இரு நாடுகளிலும் ஒவ்வொரு நிமிடமும் ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. அடுத்த சில நாட்களில் உயிரிழப்பு 20 ஆயிரத்தை தாண்டும் என்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வ தொண்டு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

துருக்கி சென்றது ‘ஜம்போ’: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதைத் தொடர்ந்து, மருந்துகள், நிவாரணப் பொருட்கள், தேசிய பேரிடர் மீட்பு படையின் 100 வீரர்கள், மருத்துவக் குழுவினருடன் இந்திய விமானப் படையின் சி17 ரக ‘ஜம்போ’ விமானம் நேற்று துருக்கியின் அடானா நகரை சென்றடைந்தது. இதேபோல, மேலும் 2 விமானங்களில் மீட்புக் குழுவினர் விரைவில் துருக்கி செல்ல உள்ளனர் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

குஜராத் பூகம்பத்தை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி உருக்கம்: டெல்லியில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, குஜராத்தில் கடந்த 2001-ல் ஏற்பட்ட பூகம்பத்தை நினைவுகூர்ந்து பேசும்போது, கண்கலங்கினார்.

“கடந்த 2001-ல் குஜராத்தின் கட்ச் பகுதியில் இதேபோல பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பது எவ்வளவு கடினமானது என்பது எனக்கு நன்கு தெரியும். நான் முதல்வராக இருந்து அந்த பணிகளை மேற்கொண்டிருக்கிறேன். துருக்கி மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மிகுந்த வேதனை அளிக்கிறது’’ என்று பிரதமர் கூறினார்.

கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மூத்த தலைவர் மனோஜ் திவாரி கூறும்போது, ‘‘துருக்கி மக்களின் இன்னல்களை நினைத்து பிரதமர் மோடி கண்கலங்கினார். குஜராத் பூகம்பத்தை நினைவுகூர்ந்து பேசும்போது அவரது கண்கள் குளமாகின. பேச முடியாமல் நா தழுதழுத்தது’’ என்றார்.

கடந்த 2001 ஜன.26-ம் தேதி குஜராத்தின் கட்ச் பகுதியில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் 20,000 பேர் உயிரிழந்தனர். 1.77 லட்சம் பேர் படுகாயம் அடைந்தனர். 4 லட்சம் வீடுகள் தரைமட்டமானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x