Published : 07 Feb 2023 05:42 PM
Last Updated : 07 Feb 2023 05:42 PM
புதுடெல்லி: பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு இந்தியா உதவி வருவது பாராட்டுக்குரியது என்றும், உண்மையான நண்பனைப் போல் இந்தியா உதவுகிறது என்றும் இந்தியாவுக்கான துருக்கி தூதர் ஃபிராட் சுனெல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது: ''பூகம்பம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் துருக்கிக்கு உதவ இந்தியா முன்வந்ததை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். தேவைப்படும்போது உதவுபவரே உண்மையான நண்பர் என்பதற்கு இணங்க இந்தியாவின் உதவி உள்ளது. நண்பர்கள் என்றால் ஒருவருக்கு ஒருவர் உதவுவது முக்கியம்.
துருக்கியில் நேற்று நேரிட்ட முதல் பூகம்பம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகவும், இரண்டாவது பூகம்பம் 7.6 ஆகவும் பதிவாகி உள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த 3வது பூகம்பம் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகி உள்ளது. இந்த பூகம்பங்களால் துருக்கியின் தென்கிழக்கில் உள்ள 1.4 கோடி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது மிகப் பெரிய பேரழிவு. 21 ஆயிரத்து 103 பேர் காயமடைந்திருக்கிறார்கள். 6 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. 3 விமான நிலையங்கள் சேதமடைந்துள்ளன.
துருக்கிக்கு மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கி வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. முதல் பூகம்பம் நேரிட்ட உடன், பிரதமர் மோடியின் உத்தரவின்பேரில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதையடுத்து, மீட்புப் படையினரும், மீட்புப் பணிக்குத் தேவையான ஆயுதங்களும், மோப்ப நாய்களும், மருத்துவக் குழுவினரும், மருந்துப் பொருட்களும் துருக்கிக்கு இந்தியா அனுப்பிவைத்துள்ளது. இந்தியாவின் முதல் விமானம் இன்று காலை 3 மணி அளவில் புறப்பட்டு துருக்கி சென்றடைந்தது.
பூகம்பம் ஏற்பட்ட முதல் 48-72 மணி நேரங்கள் மிகவும் முக்கியமானவை. இதை உணர்ந்து இந்தியா செயல்பட்டுள்ளது. இந்திய குழு தற்போது அங்கு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து, இரண்டாவது விமனத்தையும் இந்தியா அனுப்பி உள்ளது. இந்தியாவின் கனிவு மிக்க இந்த உதவியை நாங்கள் பாராட்டுகிறோம்'' என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் செயல்படும் நாடாக துருக்கி உள்ளது. எனினும், அதை கருத்தில் கொள்ளாமல் துருக்கிக்கு இந்தியா உதவி வருவதும் அதற்கு அந்நாடு பாராட்டு தெரிவிப்பதும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT