Published : 07 Feb 2023 10:08 AM
Last Updated : 07 Feb 2023 10:08 AM
அங்காரா: துருக்கியில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தால் அண்டை நாடான சிரியாவிலும் சேர்த்து இதுவரை 4000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று (பிப்.7) காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் 5.6 ரிக்டராக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்லும் சூழலில் மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து துருக்கி சுகாதார அமைச்சர் ஃபரத்தீன் கோக்கோ கூறுகையில், கடுமையான பனிப்பொழிவு காரணமாக மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பூகம்பத்தின் தாக்கமும் அதிகமாக இருப்பதால் மீட்புப் படைகளுக்கு அது சவாலாக உள்ளது என்றார்.
உயிரிழப்பு அதிகாரபூர்வ தகவல்: பூகம்பத்தால் துருக்கியில் தற்போது வரை 2921 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 15,834 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிரியாவில் இதுவரை 1451 பேர் உயிரிழந்துள்ளனர். 3531 பேர் காயமடைந்துள்ளனர். மொத்தம் இரு நாடுகளிலும் சேர்த்து இதுவரை 4372 பேர் உயிரிழந்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு இருநாடுகளிலும் சேர்த்து பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடக்கலாம் என அஞ்சுவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் இன்று காலை துருக்கியின் மத்திய பகுதியில் மையம் கொண்டு 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
5600 கட்டிடங்கள் தரைமட்டம்: பூகம்பத்தால் உலுக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் 5600 கட்டிடங்கள் தரைமட்டமாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் பல கட்டிடங்கள் அடுக்குமாடி குடியிருப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.
145 நில அதிர்வுகள்.. துருக்கி நாட்டின் துணை அதிபர் ஃபுவாட் ஓக்டே கூறுகையில், "இதுபோன்ற பேரிடர் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும். இந்தப் பூகம்பத்தில் இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். அதை எதிர்கொள்ளவும் நாங்கள் மனதளவில் தயாராகி வருகிறோம். நேற்று (பிப்.6) காலை ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து இதுவரை 145 நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் 3 அதிர்வுகள் 6.0 ரிக்டருக்கும் அதிகமானவை" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT