Published : 07 Feb 2023 02:35 AM
Last Updated : 07 Feb 2023 02:35 AM
இஸ்தான்புல்: துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி 6 (திங்கள்கிழமை) அதிகாலை 4 மணி துருக்கியிலும் சிரியாவிலும், இன்னும் சில அண்டை நாடுகளிலும். துருக்கியின் தொழில்நகரான காசியான்டேப் நகரில் ஏற்பட்ட பூகம்பம் துருக்கியையும், சிரியாவையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கியில் இடிந்து விழுந்த 5,606 கட்டிடங்களில் குடியிருப்பாளர்கள் நிறைந்த பல மாடி அடுக்குமாடி கட்டிடங்களும் அடங்கும். காசியான்டேப் சிரியா நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. அதனால் துருக்கி, சிரியா என இரண்டு நாடுகளுமே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் துருக்கியில் உயிரிழப்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
நிலநடுக்கம் குறித்து பேசியுள்ள தென்கிழக்கு துருக்கிய நகரமான கஹ்ராமன்மாராஸில் வசிக்கும் 23 வயதான நிருபர், மெலிசா சல்மான் என்பவர், "இதுபோன்ற அனுபவத்தை நாங்கள் முதன்முறையாக அனுபவித்தோம். இது மிகப்பெரிய பேரழிவு" என்றுள்ளார். சிரியாவின் தேசிய நிலநடுக்க மையத்தின் தலைவர் ரேட் அகமது பேசுகையில், "எங்கள் மையத்தின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம்" என்று கூறினார்.
இதனிடையே, சிரியாவில் குறைந்தது 1,293 பேர் இறந்ததாக அந்நாட்டு அரசாங்கமும் மீட்புப் படையினரும் தெரிவித்தன.
இறந்தவர்களுக்கு ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என துருக்கி அறிவித்துள்ளது.
பனிப்புயல் காரணமாக மீட்புப் பணி தடை: துருக்கியில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. பனியில் முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக மீட்புப் பணி தடைபட்டது. மேலும், நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள மூன்று முக்கிய விமான நிலையங்கள் செயல்பட முடியாத நிலை உள்ளது. இதனால், முக்கிய உதவிகள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகின் மிகவும் தீவிரமான பூகம்ப மண்டலங்களில் ஒன்றாக கருதப்படும் துருக்கியில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. நாட்டின் கடைசி 7.8 அளவு நிலநடுக்கம் 1939 இல் கிழக்கு எர்சின்கான் மாகாணத்தில் நிகழ்ந்தது. அப்போது 33,000 பேர் தங்கள் உயிரை இழந்தனர். அதேபோல், துருக்கியில் இதற்கு முன் 1999-ம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி இருந்தது. அந்த நிலநடுக்கம் காரணமாக 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT