Published : 06 Feb 2023 05:16 PM Last Updated : 06 Feb 2023 05:16 PM
துருக்கி, சிரியா பூகம்ப பலி 2,300 ஆக அதிகரிப்பு - தூக்கத்தில் அடங்கிய உயிர்கள்!
பிப்ரவரி 6 அதிகாலை 4 மணி எல்லா நாளையும் போல் புலரவில்லை துருக்கியிலும் சிரியாவிலும், இன்னும் சில அண்டை நாடுகளிலும். துருக்கியின் தொழில்நகரான காசியான்டேப் நகரில் ஏற்பட்ட பூகம்பம் துருக்கியையும், சிரியாவையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதுவரை 2,300-க்கு மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாலை 4.30 மணியளவில் பெரும்பாலான மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது துருக்கியின் காசியான்டேப் நகரிலிருந்து 40 கீலோமீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 11 மைல் ஆழத்தில் பூகம்பம் மையம் கொண்டது.
என்னவென்று உணர்வதற்குள் கட்டிடங்கள் தரைமட்டமாக நூற்றுக் கணக்கான உயிர்கள் பறிபோயின.
காசியான்டேப் சிரியா நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. அதனால் துருக்கி, சிரியா என இரண்டு நாடுகளுமே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் துருக்கியில் உயிரிழப்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
துருக்கி, சிரியா இரு நாடுகளிலும் இதுவரை 2,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பலர் இன்னமும் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை 1,500-க்கும் மேற்பட்டோர் துருக்கியில் பலியானதாக தகவல்.
சிரியாவில் மட்டும் 800-க்கும் மேற்பட்டோர் இந்த பூகம்பத்தால் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1700 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
துருக்கியில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வீதிகள் எங்கும் கட்டிட இடிபாடுகளும் மரண ஓலங்களுமே நிறைந்திருக்கின்றன.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துருக்கியில் நிறைய கட்டிடங்கள் ஃபர்ட்டில் கான்க்ரீட் எனப்படும் வலுவற்ற கட்டுமான பொருட்களால் கட்டமைக்கப்பட்டுள்ளதாலேயே சேதம் அதிகமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.
பூகம்பம் குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் கூறும்போது ”நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டன. இந்த பேரழிவை நாங்கள் கூடிய விரைவில் கடந்து செல்வோம் நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
துருக்கி, சிரியா பூகம்பங்களை தொடர்ந்து இந்தியா துருக்கி மீட்புப் படையையும், நிவாரணப் பொருட்களையும் அனுப்பிவைக்கிறது. துருக்கி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
துருக்கியில் இடிந்த கட்டிடங்களில் மருத்துவமனைகளும் அடங்கும். அதனால் மீட்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உயர்தர சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் அங்கு கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால் மீட்புப் பணிகளையும் முழுவீச்சில் செய்யமுடியாத சூழல் உள்ளது.
துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி மாலை 4 மணியளவில் ஏற்பட்ட பூகம்பத்தின் தாக்கம் 7.5 ரிக்டராக பதிவாகியுள்ளது.
இதைத் தொடர்ந்தும் நில அதிர்வுகள் ஏற்பட்டு வந்த வண்ணம் இருந்தன. 50-க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
துருக்கியில் மட்டுமல்லாது அண்டை நாடான சிரியாவிலும் இந்த நிலநடுக்கங்கள் உயிர் சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்தி உள்ளன.
சிரியாவுக்கும், துருக்கிக்கும் மீட்பு, நிவாரணக் குழுவை அனுப்புவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு சிரியா வீரர்களை அனுப்பி உதவியது குறிப்பிடத்தக்கது.
அதோடு, லெபனான், சைப்ரஸ், கிரீஸ், ஜோர்டான், இராக், ரொமானியா, ஜார்ஜியா, எகிப்து ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்து 5,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிரீன்லாந்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
இந்த பூகம்பத்திற்கு துருக்கி - சிரியா இரு நாடுகளிலும் இதுவரை 2,300 பேர் வரை பலியாகினர். ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். பூகம்பத்திற்கு துருக்கியின் காசியான்டேப், சிரியாவின் அஃப்ரின் நகரமும் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளன.
இரு நாடுகளிலும் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 1939-ஆம் ஆண்டுக்குப் பிறகு துருக்கியில் ஏற்பட்ட பேரழிவு பூகம்பம் இது என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
துருக்கியில் இதற்கு முன் 1999-ம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி இருந்தது. அந்த நிலநடுக்கம் காரணமாக 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.
WRITE A COMMENT