Published : 06 Feb 2023 02:59 PM
Last Updated : 06 Feb 2023 02:59 PM
அங்காரா - டமஸ்கஸ்: துருக்கி - சிரியா எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 640-ஐ கடந்துள்ளது. பலரும் இடிபாடுகளில் சிக்கித் தவிக்கும் நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.
துருக்கியின் தொழில் நகரான காசியான்டேப் சிரிய எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதன் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியது. பூகம்பத்தின் மையம் காசியான்டேப் நகரிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.
பூகம்பம் ஏற்பட்ட பகுதியில் இருந்து சரியாக 15 நிமிடங்கள் இடைவெளியில் இன்னொரு சக்திவாய்ந்த நில அதிர்வும் ஏற்பட்டது. அதன் தாக்கம் அளவுகோலில் 6.7 ரிக்டராக பதிவாகியது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பூகம்பத்தின் அதிர்வலைகள் லெபனான், சிரியா, ஜோர்டான், இராக் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது.
640 பேர் பலி: பூகம்பத்தால் இதுவரை 640-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இடிபாடுகளில் பலரும் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தால் துருக்கி - சிரியாவில் உயிரிழப்புகள் ஏற்பட்ட போதிலும் , துருக்கியில்தான் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் கடப்போம்: பூகம்பம் குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் கூறும்போதும் ”நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டன. இந்த பேரழிவை நாங்கள் கூடிய விரைவில் கடந்து செல்வோம் நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்படும் மீட்புப் பணி: காசியன்டேப் உள்ளிட்ட நகரங்களில் பனிப்பொழிவு தீவிரமாக இருப்பதால் மீட்புப் பணிகளில் சிரமம் நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் உதவி: ”பூகம்ப பாதிப்புகளை சரி செய்ய துருக்கிக்கு இஸ்ரேல் உதவ தயார்” என்று இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி இரங்கல்: இந்திய பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "துருக்கியில் நேரிட்ட பூகம்பத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பலர் படுகாயமடைந்துள்ளனர். ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. துருக்கியின் அண்டை நாட்டையும் இந்த பூகம்பம் பாதித்துள்ளது. இந்தச் சூழலில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இந்தியாவின் 140 கோடி மக்களின் அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
துருக்கியை உலுக்கிய நிலநடுக்கங்கள்: உலகின் சக்திவாய்ந்த நிலநடுக்க மண்டலங்களில் துருக்கியும் ஒன்று. கடந்த 1999-ஆம் ஆண்டு துருக்கியின் டுஸ்ஸே நகரில் 7.4 ரிக்டர் அளவில் ஒரு பூகம்பம் ஏற்பட்டது. அதில் சுமார் 17 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். துருக்கி வரலாற்றில் தற்போதுவரை அதுதான் மோசமான நிலநடுக்கமாக அறியப்படுகிறது.
அதன் பின்னர் 2020-ல் எல்சாயிக் நகரில் 6.8 ரிக்டர் அளவில் தாக்கிய நிலநடுக்கத்தில் 40 பேர் பலியாகினர். கடந்த 2022 அக்டோபரில் ஏஜியன் கடற்கரையை ஒட்டி 7.0 ரிக்டரில் ஒரு பூகம்பம் ஏற்பட்டது. இதில் 114 பேர் கொல்லப்பட்டார். 1000 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், துருக்கியின் வடகிழக்குப் பகுதியான காசியான்டேப்பில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டு இதுவரை 640-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT