Published : 24 Jan 2023 09:39 AM
Last Updated : 24 Jan 2023 09:39 AM
வாஷிங்டன்: கரோனா வைரஸ், உக்ரைன் – ரஷ்யா போர், கச்சா எண்ணெய் விநியோகம், அரசியல் நிலைத்தன்மை, உற்பத்தி – நுகர்வு இடையேயான வேறுபாடு உள்பட பல்வேறு காரணங்களால் உலகெங்கிலும் மந்தமான பொருளா தார நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான பெரிய ஐ.டி. நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. அமேசான், சேல்ஸ்ஃபோர்ஸ், மெட்டா, ட்விட்டர், உபேர் உள்ளிட்ட நிறுவனங்கள் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளன.
இதனால் உலகெங்கிலும் உள்ள பெரிய நாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அமெரிக்காவில் பணி புரியும் இந்தியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஐ.டி. நிபுணர்கள், வல்லுநர்கள், ஊழியர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் முதல் தற்போது வரை அமெரிக்காவில் மட்டும் சுமார் 2 லட்சம் ஐ.டி. ஊழியர்கள் வேலையை இழந்துள்ளனர் என்று தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதில் 30 முதல் 40 சதவீத ஊழியர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இவர் கள் பெரும்பாலும் எச்-1பி, எல்-1 விசாக்களைப் பெற்றவர்கள்.
இந்த விசாக்களைப் பெற்றிருக்கும் போது அமெரிக்காவில் பணியில் இருந்தால் மட்டுமே அவர்கள் அமெரிக்காவில் தங்க முடியும். வேலையை இழந்திருந்தால் குறிப் பிட்ட நாட்களுக்குப் பின்னர் அவர்கள் சொந்த நாடு திரும்பும் அவல நிலை ஏற்படும். இதனால் ஐ.டி. ஊழியர்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
60 நாட்களுக்குள் வேலை.. எச்-1பி விசா வைத்திருப்பவர்கள், வேலையை இழந்த 60 நாட்களுக்குள் அடுத்த வேலையைத் தேடிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் சொந்த நாடு திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் பல ஐ.டி. நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை நீக்கி வருவதால் உடனடியாக வேலை கிடைக்கும் நிலை அங்கு இல்லை.
சிலிக்கான் வேலியில் உள்ள தொழில் முனைவோர் அஜய் ஜெயின்புதோரியா கூறும்போது, “ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப ஊழியர்கள் பணி நீக்கங்களை எதிர்கொள்வது துரதிருஷ்ட வசமானது. எச்-1பி விசாவில் 60 நாட்களுக்குள் வேலை தேடாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் உள்ளது” என்றார்.
இந்நிலையில் அமெரிக்காவில் குளோபல் இந்தியன் டெக்னாலஜி புரொபஷனல்ஸ் அசோசியேஷன் (ஜிஐடிபிஆர்ஓ), ஃபவுண்டேஷன் ஃபார் இந்தியா அன்ட் இந்தியன் டயஸ்போரா ஸ்டடீஸ் (எஃப்ஐஐடிஎஸ்) என்ற அமைப்புகள் இந்தியாவைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர்களுக்காக சமூக அடிப்படையிலான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி அவர்களுக்கு புதிய வேலை கிடைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT