Published : 24 Jan 2023 09:33 AM
Last Updated : 24 Jan 2023 09:33 AM
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. மேலும் கடன் பிரச்சினையாலும் பாகிஸ்தான் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. மின்சார துறையும் பெரும் கடனில் மூழ்கி உள்ளது. இதனால் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய முடியவில்லை. மின் இணைப்புகளில் அதிக முதலீடும் மேற்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் பாகிஸ்தான் தேசிய மின் விநியோக மையத்தில் நேற்று திடீரென பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் நேற்று காலை 7.34 மணிக்கு தலைநகர் இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர், குவெட்டா உட்பட முக்கிய நகரங்களின் மின் விநியோக லைன்கள் பாதிக்கப்பட்டன. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின. தேசிய மின் விநியோக மையத்தில் மின்னழுத்தம் சீரற்று காணப்பட்டதால் இந்த மின்தடை ஏற்பட்டதாக விசாரணையில் அதிகாரிகள் கூறுகின்றனர். பெரும் தட்டுப்பாட்டால் எரிபொருள் மற்றும் கேஸ் மூலம் இயங்கும் பல தொழிற்சாலைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் பாகிஸ்தானில் ஏற்படும் மிகப் பெரிய மின் தடை இதுவாகும்.
இதுகுறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ‘‘இஸ்லாமாபாத்தில் உள்ள 117 மின் விநியோக கிரிட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன. இதனால் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, அட்டாக், ஜீலம், சக்வால் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சில பகுதிகள் மின் தடையால் பாதிக்கப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்துள்ளன.
மின்சார அமைச்சகம் விளக்கம்: இந்தப் பிரச்சினை குறித்து பாகிஸ்தான் மின்சார துறை அமைச்சகம் கூறும்போது, ‘‘மின்சார விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சில மின்சார கிரிட்கள் சீரமைக்கப்பட்டுவிட்டன. இஸ்லாமாபாத், பெஷாவர் நகரங்களில் மின் விநியோகம் சீரமைக்கப்பட்டு விட்டது’’ என்று தெரிவித்தது. மின் இணைப்புகளில் அதிக முதலீடு மேற்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT