Published : 23 Jan 2023 04:46 AM
Last Updated : 23 Jan 2023 04:46 AM
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே மாண்ட்ரே பார்க் நகரம் அமைந்துள்ளது. அங்கு கார்வே அவென்யூ பகுதியில் செங் வான் சோய் என்ற சீன வம்சாவளி தொழிலதிபருக்கு சொந்தமான ஓட்டல் செயல்படுகிறது.
அந்த ஓட்டலில் நேற்று இரவு சீன புத்தாண்டு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது மர்ம நபர் ஒருவர், அதிநவீன துப்பாக்கியுடன் ஓட்டலில் நுழைந்து கண் மூடித்தனமாக சுட்டார். இதில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்து தாக்குதல் நடத்திய மர்ம நபரை தேடினர். அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவர் யார், எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது குறித்து எவ்வித தகவலும் தெரியவில்லை. அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாண்ட்ரே பார்க் நகரம் முழுவதும் சீன புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் சீன நகரம்
லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே 11 கி.மீ. தொலைவில் மாண்ட்ரே பார்க் அமைந்துள்ளது. நகரில் 61,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 65 சதவீதம் பேர் சீன வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் ஆண்டுதோறும் சீன புத்தாண்டு மாண்ட்ரே நகரில் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டும் நகரின் அனைத்து ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் சீன புத்தாண்டு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதில் கார்வே அவென்யூ பகுதி ஓட்டலில் இனவெறியின் காரணமாக சீனர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. கடந்தாண்டு சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும் மாண்ட்ரே பார்க் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
தாக்குதல் நடத்தப்பட்ட ஓட்டல் உரிமையாளர் செங் வான் சோய் கூறியதாவது. சீன புத்தாண்டை ஒட்டி எங்கள் ஓட்டலில் 2 நாட்கள் இரவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சம்பவத்தன்று இரவு நடனம் ஆடும் விடுதியில் மர்ம நபர் புகுந்து துப்பாக்கியால் சுட்டுள்ளார். அப்போது பாப் பாடல் சப்தம் அதிகமாக இருந்ததால் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்கவில்லை. சில நிமிடங்களுக்கு பிறகே விபரீதம் புரிந்து அங்கிருந்தவர்கள் தப்பியோடினர். உடனடியாக ஓட்டல் ஊழியர்கள் எங்களது முக்கிய அறைகளின் கதவுகளை மூடினர். இதனால் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபரால் முன்னேறி வரமுடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் இனவெறி தாக்குதலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று மாண்ட்ரே நகர மக்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT