Published : 22 Jan 2023 06:10 PM
Last Updated : 22 Jan 2023 06:10 PM
பீஜிங்: சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒருபுறம் களைகட்டியிருக்க இன்னொருபுறம் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் கரோனா உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாக அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ஒரே வாரத்தில் 13 ஆயிரம் பேர் கரோனாவால் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாகவும், அவரின் கூற்றின்படி ஜனவரி 13 முதல் ஜனவரி 19 வரையிலான காலகட்டத்தில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாககவும் சர்வதேச ஊடகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
கணக்கு கேட்கும் உலக சுகாதார நிறுவனம்: ஜனவரி 12 ஆம் தேதி வரை 60 ஆயிரம் பேர் கரோனாவால் உயிரிழந்ததாக சீன அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் சீனாவின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,கரோனா தொற்று காரணமாக நேற்று மட்டும் 681 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் கரோனா தொற்றுடன் வேறு நோய்கள் இருந்ததால் 11 ஆயிரத்து 977 பேர் இறந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சீன அரசு தொற்று பரவல், உயிரிழப்புகள், மரபணு பகுப்பாய்வு முடிவுகள் குறித்து உறுதியான அதிகாரபூர்வமான தகவலை அளிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எச்சரிக்கும் தனியார் ஆய்வு மையம்: சீனாவில் தற்போது நடைபெற்று வரும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் காரணமாக அன்றாட கரோனா உயிழிப்பு 36 ஆயிரமாக அதிகரிக்கும் என்று ஏர்ஃபினிட்டி என்ற தனியார் தொற்றுநோய் ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. ஜீரோ கோவிட் கொள்கையை சீனா கடந்த டிசம்பர் மாதம் தளர்த்தியதிலிருந்து இதுவரை 6 லட்சம் பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அந்நிறுவனம் கணக்கிட்டுள்ளது.
சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர், "இந்த ஆண்டு முயலின் ஆண்டாக கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு சீனாவிலிருந்து கரோனா தொற்று வேகமாக அகல வேண்டும்" என்று பிரார்த்தனை செய்து கொண்டதாக தெரிவித்தார். சீனர்கள் தங்கள் புத்தாண்டை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விலங்கோடு தொடர்புபடுத்தி கொண்டாடுவது வழக்கம்.
சுகாதார அதிகாரியின் கருத்து: இந்நிலையில், சீனாவில் மற்றுமொரு கரோனா அலை ஏற்படாது என்று சீன நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைமை தொற்றுநோய் தடுப்பு நிபுணரான வூ ஜுன்யு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெய்போ என்ற சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட தகவலில், "வசந்த விழாவை ஒட்டி நிறைய பேர் பயணங்களை மேற்கொண்டிருந்தாலும் கூட தொற்று பரவ வாய்ப்பிருந்தாலும் கூட இன்னொரு அலைக்கு வாய்ப்பில்லை. ஏனெனில் இப்போதே 80 சதவீதம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுவிட்டனர்" என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment